India

“நீதித்துறையின் மீது இன்னொரு தாக்குதல்” : குஜராத் படுகொலை வழக்கில் நீதிபதியை இடமாற்றி மோடி அரசு அராஜகம்!

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித்துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியேற்று வந்தது.

ஆனால், மோடி ஆட்சியில் தமது கடமைகளை செய்யாமல் நீதித்துறை விலகிக் கொண்டதாகவும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதாகவும் முன்னாள் இந்நாள் நீதிபதிகள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து வெளியான செய்திகளை விட நீதித்துறை குறித்து நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகளின் தாக்கம் அதிகம். குறிப்பாக தங்களுடைய விவகாரங்களிலேயே நீதித்துறையால் தனது உறுதித் தன்மையை நிலைநாட்ட முடியவில்லை. அதனால் மக்களும் தங்களின் பிரச்னைக்கு நீதிமன்றம் தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று பேசப்படுகிறது.

அதற்குக் காரணம், தீர்ப்பு வெளியாகும் முன்பே விசாரித்த நீதிபதியின் மரணம், இடமாற்றம் மற்றும் பதவிப்பறிப்பு போன்றவையே! ஏன் சமீபத்தில் கூட டெல்லி கலவரத்தை அரசு கட்டுப்படுத்தத் தவறியபோது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் கேள்வி எழுப்பினார். அவர் தலையீட்டை அடுத்து அவர் வேறு நீதிமன்றத்திற்கு இடம் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், குஜராத் கலவரத்தில் முக்கிய குற்றவாளிகளின் தீர்ப்பை தள்ளிப்போடும் வகையில் வழக்கை விசாரித்த நீதிபதியை இடம்மாற்றம் செய்து புதிய நீதிபதியை நியமித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, கடந்த 2002 பிப்ரவரி 28 அன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதுகுறித்த வழக்குகளில் மிகப்பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நரோடாகேம் என்ற வழக்கும் ஒன்றாகும்.

இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது. அதன்பிறகு அந்தக் குழு தொடர்ச்சியாக தங்களின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அமைச்சரவையில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மாயா கோட்னானி இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தார்.

அவருடன், முன்னாள் பஜ்ரங் தள் தலைவர், வி.எச்.பி முன்னாள் தலைவர் உட்பட 82 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நரோடா கேமில் 11 முஸ்லிம்களும், நரோடா பாட்டியாவில் 96 முஸ்லிம்களும் கொல்லப்படுவதற்கு ஏனைய குற்றவாளிகளுடன் இணைந்து கோட்னானி சதி செய்தார் என்கிற விவரம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், 96 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலையில் கொட்னானி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2018-ல் குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதனையடுத்து படுகொலை தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அதுமட்டுமின்றி, 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நரோடா கேம் படுகொலை வழக்கு, தனியாக அகமதாபாத் நகர மற்றும் சிவில் அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தற்போது விசாரணை முடிவடையும் கட்டத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி தவே, திடீரென தெற்கு குஜராத் வல்சாட் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது தற்போதைய இடத்திற்கு பாவ்நகர் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய எஸ்.கே.பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது வழக்கை தாமதப்படுத்தி, நீதியை குலைக்கும் முயற்சி. ஏனெனில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு, மாயா கோட்னானியின் இறுதி வாதம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு புதிய நீதிபதி வழக்கைப் புரிந்துகொள்ள முழு ஆவணங்களையும் ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும்.

சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட, 187 அரசுத் தரப்பு சாட்சிகள், 60 பாதுகாப்பு சாட்சிகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைப் படித்த பிறகு முழு வாதத்தையும் கேட்கவேண்டும். இவை முழுவதையும் முடிக்கவே குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்.

அதனல் தீர்ப்பு தள்ளிப்போகும். ஏற்கெனவே 18 ஆண்டுகளாக நரோடா கேம் படுகொலை வழக்கு நீதிக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நீதிபதி மாற்றம், மற்றொரு பின்னடைவாகும். தாமதமான நீதி அநீதிக்குச் சமம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!