India

“ஆதாரம் இருந்தும் பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”-டெல்லி வன்முறை குறித்து டி.ஆர்.பாலு ஆவேசம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் போராட்டத்தின்போது இந்துத்வ கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையால் 53 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து இன்றளவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை முழுக்க முழுக்க திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதே என சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மதவாதத்தை மேற்கொண்டு இஸ்லாமியர்களை தாக்கி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு இன்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது, விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தி.மு.க மக்களவைக்குழு தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய மோடி அரசைச் சாடியுள்ளார்.

அப்போது, சி.ஏ.ஏ மற்றும் டெல்லி வன்முறை தொடர்பாக இங்கிலாந்து, ஈரான், இந்தோனேசியா, துருக்கி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களிலும் விவாதம் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் டி.ஆர்.பாலு.

மேலும், ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளை பற்றி பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் விவாதிப்பது நமக்குதான் அவமானம் எனத் தெரிவித்த டி.ஆர்.பாலு, “டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வன்முறை பேச்சுகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

வன்முறையை தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதியே உத்தரவிட்டிருந்த நிலையில், அவர்கள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரில் சந்திக்காதது ஏன்?

ஜே.என்.யூ, ஜாமியா பல்கலைகழகங்களில் நுழைந்து ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், டெல்லி வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Also Read: “ஊழல் பட்டியல் பா.ஜ.கவிடம் இருப்பதால் NPRக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறார்கள்” : மு.க.ஸ்டாலின்