India

“சென்சஸ் தரவுடன் NPR பணியை மேற்கொள்வது சட்டத்தை மீறிய செயல்” - மோடி அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கடிதம்!

2021ல் நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான விவரங்களை தொகுக்கக்கூடாது என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 190 பொருளாதார நிபுணர்களும், சமூக அறிவியலாளர்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சென்சஸ் என்பது, நாட்டின் மக்கள்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பம் குறித்த அடிப்படை தகவல்கள் பெறப்படுவதால் இது மிகவும் முக்கியமான தரவு ஆகும்.

அதன்மூலம், ஒரு மதிப்பீட்டிற்கும், மக்களின் நிலைமைகளை ஆராய்ந்திடவும், அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூக, பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்கவும் அவசியமானதாக அமையும். அதனால் சென்சஸ் தரவுகள் பாதுகாப்பானதாக இருப்பதோடு, வேறெதுவும் கலந்து மாசுபடாமல் இருக்கவேண்டியதும் அவசியம்.

எனினும், தற்போது பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைச் சுற்றி உள்ள அம்சங்கள் உண்மையான ஆபத்தைக் கொண்டுள்ளது. இதனை செயல்படுத்தும் போது, ஒரு நபரின் குடியுரிமையைத் தீர்மானிப்பதில் ‘சந்தேகத்திற்குரியவர்’ என்று முத்திரைகுத்தும் ஆபத்து இருப்பதாகக் மக்கள் அஞ்சுகிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் ஏற்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் இதனால் ஏதாவது பயன் ஏற்படுமா என்றும் தெரியவில்லை. சென்சஸ் தரவுடன் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும் மேற்கொள்வது 1948ம் ஆண்டு சென்சஸ் சட்டத்தின் 15வது பிரிவை மீறிய செயலுமாகும்.

ஒரு சென்சஸ் அதிகாரி தன் கடமையின் போது வேறெவரும் எந்தவொரு புத்தகத்தையோ, பதிவேட்டையோ கொண்டு வரத் தடை விதிக்கிறது. எனவேதான் 2021 சென்சஸ் நேர்மையுடன் நடத்திடவேண்டும் என்பதற்காகவே, இதோடு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

எப்படிப் பார்த்தாலும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்காக தரவு சேகரிப்பதற்கான முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியுள்ளார்கள். கேரளா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் என்.பிஆரை அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த கடிதம் வெளிவந்துள்ளது.

அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள 190 பேரில் திட்டக்கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் அபிஜித் முகோபாத்யாயா, அபிஜித் சென், சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ், உத்சா பட்நாயக் முதலானோரும் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.

Also Read: “ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம் என்பதை பா.ஜ.க நினைவில் கொள்ளவேண்டும்” : மு.க.ஸ்டாலின் அறிவுரை!