India

“யாருக்காக இவ்வளவு கூட்டம் தெரியுமா?” - ‘சத்தியம்’ போலான தீர்ப்புகள் உருவாக்கும் சாத்தியம் இதுதான்!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதருக்கு ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஒன்று கூடி பிரியாவிடை அளித்தனர்.

இந்துத்வா குண்டர்களால் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், வன்முறையைத் தூண்டும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் பேசிய வீடியோவை போலிசாருக்கு காட்டி, இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பா.ஜ.கவுக்கு எதிராக உத்தரவிட்டதுதான் அவரது பணியிட மாற்றத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதி முரளிதருக்கு இன்று பிரிவுபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பங்கேற்று நீதிபதி முரளிதருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

பிரிவுபசார விழாவின்போது பேசிய டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், “எந்த தலைப்பையும் பேசக்கூடிய, எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கக்கூடிய சிறந்த நீதிபதியை நாம் இழக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்து நெகிழ்ந்துள்ள பலர் “உண்மையான ஹீரோக்களுக்கான மரியாதை இதுதான்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி முரளிதர் தனது வழக்கறிஞர் பணியை 1984ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினார். 1987ஆம் ஆண்டு டெல்லி சென்ற அவர் உச்சநீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நர்மதா அணை கட்டுமானப் பணிகளால் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உட்பட சமூக நலன் சார்ந்த பல்வேறு வழக்குகளில் கட்டணமின்றியும், குறைந்த தொகையைப் பெற்றுகொண்டும் வாதாடியுள்ளார்.

நீதியரசர் முரளிதருக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மூத்த வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான பிரசாந்த் பூஷன், “டெல்லி உயர்நீதிமன்றம் இதுபோன்ற பிரியாவிடையை எப்போதும் கண்டதில்லை. ஒரு நீதிபதி தனது தீர்ப்பு சத்தியத்திற்கு நெருக்கமானது என்று காட்டி அரசியலைமைப்பையும், உரிமைகளையும் நிலைநாட்டியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை : நீதியின் கரங்களை வெட்டும் மோடி அரசு - அதிர்ச்சி தகவல்!