India
“நீங்க ஒரு விவசாயி; இதுகூட தெரியாமலா இருப்பீங்க” : எடப்பாடிக்கு ஒரு மக்காச்சோள விவசாயி எழுதிய கடிதம்!
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஒரு சாமானியன் எழுதிக்கொண்ட கடிதம்.
நலமாக இருக்கிறீர்களா? உங்களுக்கென்ன நலத்திற்கு, நான் நல்லாயில்லை.
மக்காச்சோளத்தை நட்டேன். சோற்றுக்கே வழியில்லாமல் இருக்கிறேன். நான் மட்டுமா? தமிழ்நாட்டிலுள்ள லட்சக்கணக்கான மக்காச்சோள விவசாயிகளின் நிலைமையும் இதுவே. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கர்களில் சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலும் மானாவாரியாகத்தான் சாகுபடி செய்கின்றனர். ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆகும் செலவை நினைத்தால் குலை நடுங்குகிறது.
2 உழவுக்கு ரூ.1800, உழவு ஓட்ட ரூ.1200, மக்காச்சோள விதை 4 கிலோ ரூ.2600, மக்காச்சோள நடவுக்கு (4ஆள்) ரூ.1000, யூரியா (50 கிலோ) 2 மூடைக்கு ரூ.600, களைக்கொல்லி மருந்துக்கு (2 செட்) ரூ.2800, டி.ஏ.பி உரம் 2 மூடை ரூ.2900, பொட்டாஷ் 2 மூடை ரூ.1900, அறுவடை எந்திரம் தட்டுக்கட்ட ரூ.2000, படைப்புழு மருந்து ரூ.5000, ஆக மொத்தம் ரூ.23,800. விவசாயிகளின் ‘இலவச’ உழைப்புக்கு கூலி இல்லை.
காலத்தில் மழை பெய்தால், ஒழுங்காக மருந்து அடித்தால், உரமிட்டால் 10 குவிண்டால் சோளம் விவசாயியின் கைக்கு வரும். ஒரு குவிண்டால் சோளத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது ரூ.1700 க்கு கேட்கிறான் வியாபாரி. கடன் கழுத்தை நெரிப்பதால் அவன் கேட்ட விலைக்கு விற்றுத் தொலைக்கவேண்டிய கட்டாயம் விவசாயிக்கு.
ஆடி மாதம் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2700க்கு வித்துச்சுங்க. நீங்கள் ஒரு விவசாயி. இதுகூட தெரியாமலா இருப்பீங்க. இருந்தாலும் என் மனசு கேக்கல. அதனால் தான் இதைச் சுட்டிக்காட்டினேன். இன்று ஏக்கருக்கு 10 குவிண்டால் சோளம் விளைகிறது. இன்றைய நிலவரப்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.17,000 தான் கிடைக்கிறது. ரூ.6,800 விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதைப்பற்றியெல்லாம் மோடி அரசும் கண்டுகொள்வதில்லை. உங்கள் அரசும் கண்டுகொள்வதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஓடி, ஓடி உழைக்கிறீர்கள். அதுக்கே நேரம் சரியாப்போச்சு. விவசாயிகளைப் பற்றி உங்களுக்கோ, உங்கள் அண்ணன் மோடிஜிக்கோ நினைக்க நேரமேது.
இந்த விவசாயி சோளத்தை சாகுபடி செய்ய படாத பாடுபடுவது தங்களுக்கு தெரியாதா? அவனுக்கு தாங்கள் கடன் வசதியாவது செய்து தருகிறீர்களா? கிராம கூட்டுறவு சொசைட்டிகளில் பொறுப்பிலுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் சிலருக்குத்தான் கடன் கொடுக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களை நம்பித்தான் உள்ளனர். உரக்கடைக்காரர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்யவில்லையென்றால் விவசாயி செத்துச் சுண்ணாம்பாகிப் போயிருப்பான்.
நகையை அடகு வைத்து 33 பைசா வட்டிக்கு வங்கிகளில் கடன் வாங்கிவந்தான் விவசாயி. அதற்கும் உங்கள் அண்ணன் மோடிஜி ஆப்பு வெச்சுட்டார். இனிமேல் 70 பைசா வட்டிக்குத் தான் வங்கியில் நகைக்கடன் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார். பற்றாக்குறையை சமாளிக்க விவசாயி தன் மாட்டுப் பாலை விற்கிறான்.
நாளெல்லாம் உழைக்கிற விவசாயி தனது வீட்டுத் தேவைக்கு, டீ-க்கு, தயிருக்குக் கூட பாலை வைக்காமல் முழுசாக விற்றுவிடும் நிலைமையில் வாழ்கிறான். பாலை விற்றுவிட்டு டீ குடிக்க டீ கடைகளை நோக்கி படையெடுக்கிறான் விவசாயி. கடந்த காலங்களில் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால் இன்முகத்தோடு வரவேற்று மோர் கொடுத்த காலமெல்லாம் கனவாகிப்போச்சு.
இரண்டு பருவ மழைகளும் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் காலத்தில் மருந்து அடிக்க முடியாததால் சோளப்பயிரை படைப்புழு தின்று தீர்த்துவிட்டது. அடுத்த போகம் விவசாயம் செய்ய யாரிடம் கடன் கேட்பது என்று இப்போதே திட்டம்போட தொடங்கி விட்டான் விவசாயி. அவன் மீள்வதற்கு ஒரே வழி விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன் வழங்கவேண்டுமென்று மோடிஜியிடம் வற்புறுத்த வேண்டாமா? அவர் டீ கடை வைத்திருந்தவர். ஒருவேளை அவருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரிந்திருக்காது. விவசாயி மகனாகப் பிறந்த உங்களுக்குமா விவசாயிகளின் கஷ்டம் புரிய வில்லை?
பழையபடி நகைக்கடன் 33 பைசா வட்டியில் வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கொடுத்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும். அடக்கச் செலவை விட ஒன்றரை மடங்கு விவசாய விளைபொருட்களுக்கு விலை சேர்த்துக் கொடுப்பேன் என்று மோடிஜி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்ல வேண்டாமா? உழுதவன் கணக்குப் பார்த்தால் ஒழக்குக்கூட மிஞ்சாது என்பது நம்ம பாட்டன் காலத்துப் பழமொழி. உழுதவன் கணக்குப் பார்த்தால் கோவணம் கூட மிஞ்சாது என்பது நம் காலத்து பழமொழி.
இந்தக் கஷ்டத்தையெல்லாம் கணக்கில் கொண்டு மோடிஜியிடம் நீங்கள் மேற்படி கோரிக்கைகளை வற்புறுத்த வேண்டும் என்பதே லட்சக்கணக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் உங்கள் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இந்தாண்டு ரூ.11,000 கோடி கடன் வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறீர்கள். இது யானைப் பசிக்கு சோளப் பொரிபோன்றதாகும். மீண்டும் விவசாயிகளை கந்து வட்டிக்காரனிடம் சரணடையுங்கள் என்கிறீர்களா?
மத்திய அரசு விவசாயிகளுக்கு உர மானியத்தை ரூ.77,866 கோடியிலிருந்து ரூ.70,133 கோடியாக குறைத்துள்ளது. ஆக நீங்களும், மோடிஜியும் போட்டி போட்டுக்கொண்டு விவசாயிகளை கொல்லோ கொல்லென்று கொல்லுகிறீர்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கிற மோடிஜியிடம் எங்கள் விவசாயிகளுக்கு கிள்ளியாவது கொடுங்கள் என்று கேட்கக்கூடாதா?
மக்காச்சோள விவசாய விரோத நடவடிக்கையை கைவிடவில்லையென்றால் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆட்சியை தமிழக மக்கள் அடியோடு வீழ்த்துவார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். தமிழக விவசாயிகள் எப்பொழுதுமே அமைதிப் புரட்சியை நடத்துபவர்கள். 1980 நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே தோற்கடித்தவர்கள் தமிழக விவசாயிகள் என்பதை மறந்துவிடாதீர்!”
- பி.கே.கருப்புசாமி
சிபி.ஐ(எம்) மாவட்டக்குழு உறுப்பினர், திண்டுக்கல்.
நன்றி : தீக்கதிர்
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்