India
“பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்” : மோடி அரசின் அராஜக நடவடிக்கை!
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் போராடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், கர்நாடகம், அசாம் மாநிலங்களில் மட்டும் போராடுபவர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறையில் இதுவரை 25 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதன் அடுத்தகட்டமாக தற்போது தேசத்தின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் வன்முறை வெறியாட்டத்திற்கு காவல்துறையின் மெத்தனமே காரணம் என உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
மேலும், காவல்துறை கடமையைச் செய்ய மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் உதவியுடன் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பா.ஜ.க தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் காவல்துறை முன்னிலையிலேயே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருக்கின்றனர். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்னர் திட்டமிட்டபடி இஸ்லாமியர்கள் போராடும் பகுதி அருகே டிராக்டர்களில் கற்களை கொண்டு வந்து குவிக்கும்போதும் காவல்துறை தடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்தே கலவரம் துவங்கி டெல்லியே பற்றி எரிந்தது. தற்போதைய தகவலின்படி 31 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே டெல்லி உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கவலையுடன் நேற்று நள்ளிரவில் கூடி நிலைமையை பரிசீலித்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்தே துடிதுடித்த பல உயிர்களை காப்பாற்ற வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
அதைவிடக் கொடுமை செவ்வாயன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில், பா.ஜ.க தலைவர் கபில் மிஷ்ராவின் மதவெறிப் பேச்சை பார்க்கவில்லை என நீதிபதிகளிடம் கூறினர். அதற்கு “டெல்லி போலிஸாரின் நிலையைப் பார்த்து வியப்பாக இருக்கிறது” என கூறிய நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் நீதிமன்றத்திலேயே வீடியோவை போட்டுக்காட்டி வழக்கு பதிய உத்தரவிட்டனர்.
பா.ஜ.க-வின் வன்முறை வெறியாட்டத்திற்கு டெல்லி போலிஸார் எந்தளவுக்கு உடந்தையாக இருக்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு ஏதேனும் வேண்டுமோ? கடந்த 3 நாட்களாக உலகமே கபில் மிஸ்ராவின் வெறிப்பேச்சை சமூக வலைதளத்தில் பார்த்து கைது செய்யக் கோரியது.
இப்போதாவது உண்மையான வன்முறையாளர்களை பாரபட்சமின்றி கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது. பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது FIR பதியவேண்டும் என போலிஸுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இதுதொடர்பாக நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிமன்றத்தின் இந்த தலையீடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோருக்கு சிறிய ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் மற்றொரு அதிர்ச்சியை நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதாவது பா.ஜ.கவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை திடீர் இடமாற்றம் செய்தும், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளது.
டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரை பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.
ஏற்கனவே அவரை இடமாற்றம் செய்ய கடந்த 12 -ம் தேதி கூடிய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இதனிடையேதான் 13 நாட்களுக்குப் பிறகு இன்று திடீரென இடமாற்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லி கலவர வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அராஜக நடவடிக்கை நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!