India
“குழந்தைகளுக்கு இனிப்பு வாங்க வந்த என்னை கொடூரமாக தாக்கினார்கள்” - அச்சம் விலகாமல் பேசிய முஸ்லிம் இளைஞர்!
பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து போராட்டக் களங்களில் வன்முறை வெடித்தது.
டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வன்முறை நிகழ்ந்தது. வன்முறையாளர்கள் வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்டவற்றை தீவைத்துக் கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி வன்முறையின்போது, இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர் ஒருவரை விரட்டி விரட்டி இரும்புக் கம்பிகள், கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கோரத் தாக்குதலால் நிலைகுலைந்த அவர் மண்டியிட்டு தலைகவிழ்ந்த நிலையில் மயங்கிக்கிடப்பது போன்ற போட்டோ வைரலானது. இந்தப் புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் நிறுவன புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருப்பவர், சந்த் பாக் பகுதியைச் சேர்ந்த முகமது ஜுபேர் என்பது தெரியவந்துள்ளது.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கூலி வேலை செய்துவரும் முகமது ஜுபேருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். தொழுகை முடிந்து அவர்களுக்கு இனிப்புகள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்ற ஜுபேர் மீதுதான் இந்துத்வா கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
உயிர்தப்பிப் பிழைத்த முகமது ஜுபேர் ஜி.டி.பி மருத்துவமனையில்தான் கண்விழித்திருக்கிறார். தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தித் தளத்தில் அதிர்ச்சி விலகாமல் பகிர்ந்து கொண்டுள்ளார் அவர்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் மயக்கமடையும்வரை அவர்கள் என்னை தாக்கிக்கொண்டே இருந்தார்கள். என்னை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால், விடாமல் தொடர்ந்து கட்டைகளாலும், கம்பிகளாலும் தாக்கினார்கள்.
மேலும், மதரீதியான கோஷங்களை எழுப்பியபடியே டெல்லி பா.ஜ.க நிர்வாகி கபில் மிஸ்ராவின் பெயரை அவர்கள் முழக்கமிட்டனர். நான் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் அல்ல, எனது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். நான் அவர்களை எப்போது பார்ப்பேன் எனத்தெரியாது” எனக் கண்ணீரோடு தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !