India

போன வருஷம் 12 விமான நிலையங்கள் : இந்த ஆண்டு ஏர் இந்தியா - அதானிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மோடி அரசு?

மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, கடுமையான இழப்பைச் சந்தித்து வருவதாகவும், அதன் மீது இருக்கும் கடனை காரணம் காட்டியும் தனியாருக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு.

முன்பு, ஏர் இந்தியாவுக்கான அரசின் 76 சதவிகிதம் மட்டுமே விற்கப்படும் என கூறிவந்த மத்திய அரசு, தற்போது அதன் 100 சதவிகித பங்குகளையும் தனியாருக்கு ஏல முறையின் மூலம் கொடுத்துவிட முடிவெடுத்துள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையை கடந்த 2020 ஜனவரி 27ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, பிப்ரவரி 11ம் தேதிக்குள் ஏலம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, கேள்விகளை எழுப்பி, தீர்வு காணலாம் எனத் தெரிவித்திருந்தது. அதற்கான கால அவகாசம் மார்ச் 6ம் தேதிவரை நீட்டித்திருந்தது.

ஆகையால், ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கைகளில் ஏற்கெனவே கவுதம் அதானியின் அதானி குழுமம் ஈடுபட்டதாகவும், இதற்காக மோடியும், அதானியும் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராஜ்பூர் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் அதானி குழுமம் வசம் உள்ளது. மேலும், அகமதாபாத், மங்களூரு, லக்னோ, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுகாத்தி உள்ளிட்ட விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு குத்தகை என்ற பெயரில் 50 ஆண்டுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏர் இந்தியாவை அதானி குழுமம்தான் வாங்கவிருப்பதாக வந்த செய்தி தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும், இதற்காகவே அதானி விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில், 2021-22ம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய பா.ஜ.க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு வேறு எந்த தனியார் நிறுவனங்களும் முன் வராததால் ஒருமனதாக அதானி குழுமத்துக்கு செல்வதாக எடுத்துக்கொள்ளலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கவுதம் அதானிக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கச் செய்திருக்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Also Read: “ஏர் இந்தியா தடுமாறியது எப்படி” : RTI தகவல் மூலம் மோடி அரசின் சதி அம்பலம்!