India

“சாலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவேண்டி வரும்” - தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரை 36 கிலோமீட்டருக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் 2020 ஜனவரி மாதம் வரை 31 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பணியில் கால தாமதம் குறித்து கேள்வி எழுப்பியபோது, மாநில அரசின் பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் பெறவேண்டியுள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து ஒப்புதல்களையும் எளிதில் வழங்கும் வகையில் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை உருவாக்குவதற்கான தக்க தருணம் இது என குறிப்பிட்டதுடன், இதுதொடர்பாக பதிலளிக்க இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்திய சாலை தர காங்கிரஸ் அமைப்பின் விதிகளை பின்பற்றி, சாலைகளை அமைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏதும் நேர்ந்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் பொறுப்பாக வேண்டிவரும் என எச்சரித்து, விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.