India

’3500 டன் என்பது பொய்; வெறும் 160 கிலோ தங்கம் தான்’ : பா.ஜ.க தொண்டர்களின் வதந்தியை மறுத்த புவியியல் துறை

உத்தர பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் இருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியான செய்தியால், இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செய்தியை உத்தரபிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகம் வெளியிட்டதாகவும் தகவல் பரவியது.

இந்தச் சுரங்கங்களில் இருந்து சுமார் 3,500 டன் தங்கம் வெட்டி எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பகதி என்ற இடத்தில் மட்டும் 2,700 டன் அளவுள்ள தங்கப் படிமங்களும், ஹார்தி என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்கப் படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை எடுப்பதன் மூலம் நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவைவிட 5 மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்த செய்தியை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மிகப்பெரிய அளவில் பரப்பினர்.

இந்நிலையில், ஊடகங்களில் 3,500 டன் தங்கம் இருப்பதாக வெளியான செய்தியை அடுத்து, மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, தற்போது அந்த செய்திக்கு இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “சோன்பத்ரா மாவட்டத்தில் இதுபோல் பெரிய அளவு தங்கம் இருப்பதாக புவியியல் ஆய்வு மதிப்பிடவில்லை. 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சோன்பத்ரா மாவட்டத்தில் 52,806 டன் தாது இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த தாதுவில் இருந்து, தங்கம் எடுத்தால் ஒரு டன் தாதுவில் இருந்து வெறும் 3.03 கிராம் தங்கம் தான் கிடைக்கும். அதன்படி அங்கு இருக்கும் மொத்த தாதுப்பொருள்களில் இருந்து சுமார் 160 கிலோ தங்கம் தான் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊடகங்களில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய் என்றும், அந்த வதந்தியை இனியும் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “மலைக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் 3,350 டன் தங்கம்”: உ.பியில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!