India

விக்கிபீடியா-கூகுளில் முதலிடம் பிடித்த ’தமிழ்’ : போட்டியில் இந்தி, சமஸ்கிருத மொழிகள் பெற்ற இடம் தெரியுமா?

ஆன்லைன் வலைதளங்களில் தகவல்கள் அதிகம் கிடைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பெறப்படும் தகவல் அனைத்தும் பயனர்களின் மொழிக்கு ஏற்றவாறு சென்றடையவும் முயற்சி எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியா மற்றும் கூகுள் இணைந்து Tiger 2.0 என அழைக்கப்படும் 'வேங்கை 2.0' என்ற போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

இந்த போட்டிக்கென கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வகுத்து அதிக அளவிலான கட்டுரைகள் கொடுக்கும் மொழிக்கு பரிசு அளிக்கப்படும். அதன்படி கடந்தாண்டு இந்தப் போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

அப்போது, இந்திய மொழிகளில் அதிக கட்டுரைகள் எழுதி தொடங்கத்தில் இருந்தே தமிழ் மொழி முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் தமிழ் மொழிக் கட்டுரைகளை பின்னுக்கு தள்ளி பஞ்சாபி மொழி முதலிடத்தை பெற்றது. கடந்தாண்டு கிடைக்கவிருந்த முதலிடம் நழுவிச்சென்றது.

இந்நிலையில், மீண்டும் இந்தாண்டுக்கான போட்டியை கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை விக்கிப்பீடியா மற்றும் கூகுள் இணைந்து நடத்தின. தொடர்ச்சியாக மூன்று மாதகாலம் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எழுதுவோர் களத்தில் இறங்கினர்.

இந்திய மொழிக்களுக்கிடையே நடந்த இந்தப் போட்டிகளின் முடிவு சமீபத்தில் வெளியானது. அதில், 62 பேர் பங்கேற்று 2,959 கட்டுரைகள் எழுதி தமிழ் மொழியை முதலிடம் பெறச் செய்துள்ளனர்.

அதனையடுத்து 1,768 கட்டுரைகள் எழுதி பஞ்சாபி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. தமிழ்மொழியுடன் போட்டிபோடும் இந்தியில் 417 கட்டுரைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் வெறும் 4 பேர் பங்கேற்று 19 கட்டுரைகள் மட்டுமே எழுதியதால் அம்மொழி கடைசி இடம் பெற்றுள்ளது.

இதில், தமிழ் மொழி முதலிடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் பாலசுப்ரமணியன் - வசந்த லட்சுமி தம்பதியர். இவர்கள் இருவரும் இனைந்து தமிழில் 899 கட்டுரைகளை படைத்துள்ளனர்.

இதுபோல கட்டுரைகள் எழுதிவைத்தும், அதற்கு தேவையான கணினி, இன்டர்நெட் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துகொடுத்த வேங்கைத் திட்டம் 2.0 குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மென்பொறியாளருமான நீச்சல்காரன் ஆவார்.

இனி வரும் காலங்களில் தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களை ஒன்று திரட்டி வலைதளங்களில் தமிழ் மொழிக்கென பிரத்யேக பிரிவைக் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என நீச்சல்காரன் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழுக்கு வெறும் ரூ.22 கோடி.. சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி” : தமிழ்மொழிக்கு துரோகம் செய்த மோடி அரசு!