India

“இனி இந்தியில் தான் கையெழுத்திட வேண்டும்” : இந்தியை திணிக்க எய்ம்ஸுக்கு மோடி அரசு புதிய உத்தரவு!

மத்திய அரசு நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனை நாடுமுழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் பெரும்பாலும் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் செயல்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குனர் பி.கே.ராய் நேற்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், “எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் இந்தியில் கையெழுத்திட வேண்டும். இந்தியில் அலுவலக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும், பதிலளிக்க வேண்டும், இந்தியில்தான் பதிவேடுகளைத் தயாரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் ஒரியா மாநிலத்தவர் மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல தென் மாநில மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசின் தூண்டுதன் பேரில் வெளியான இந்த உத்தரவால் அங்கு பணிபுரியும் 80% ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மோடி அரசு நாடுமுழுவதும் இந்தியை திணிக்க முயல்கிறது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசு நிறுவனங்களில் ஏனைய மொழிகளை ஓரங்கட்டும் வேலையில் இறங்கியுள்ளது.

இதன் மூலம், இந்தி தெரிந்தவர்களை மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஊழியர்களாகப் பணி அமர்த்தும் திட்டத்தின் முன்னோட்டம்தான் இதுபோன்ற உத்தரவு என்ற அச்சம் எழுந்துள்ளது.

Also Read: “தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்.. மொழிப்போர் தியாகிகள் தினமும்” - ஒரு ஊடகவியலாளரின் பதிவு!