India
“டிரம்ப் வருவதால் 7 நாட்களில் குடிசைகளை காலி செய்யுங்கள்” : குஜராத் பா.ஜ.க அரசு கெடு விதித்து அராஜகம்!
அமெரிக்க அதிபர்டொனால்டு டிரம்ப், தனது மனைவியுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மோடி அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடியுடன் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் பங்கேற்கிறார்.
அதுமட்டுமின்றி, அகமதாபாத்தின் மோடேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இணைந்து திறந்து வைக்கின்றனர். அமெரிக்க அதிபரான பிறகு, அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.
எனவே, அவருடைய வருகையை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடவேண்டும் என்பதால், டிரம்ப்பின் 3 மணி நேர குஜராத் பயணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அகமதபாத் நகரை அழகுப்படுத்த தனது அதிகாரிகள் அனைவரையும் முடக்கிவிட்டுள்ளது பாஜக அரசு.
இந்த நூறு கோடியில், 80 கோடி ரூபாயை சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைத்தல் பணிக்கும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாயை பாதுகாப்பு பணிக்கும், 7 கோடி முதல் 10 கோடி ரூபாயை விருந்தினர்களின் போக்குவரத்து, தங்குவதற்கான ஏற்பாடுகளுக்கும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி-டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடு என பணத்தை வாரி இரைத்து செலவு செய்ய உத்தரவிட்டுள்ளது இந்த மத்திய அரசு.
இந்த நிகழ்ச்சிக்காக குஜராத் பகுதியில் உள்ள குடிசைமக்களை டிரம்ப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப்பகுதிகளின் எதிரில் 7 அடிக்கு சுவர் ஒன்று எழுப்பப்பட்டது.
சமூக ஊடங்களில் இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களை தங்களின் குடிசைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அகமதாபாத் மோடேரா பகுதியில் உள்ள குடிசை பகுதி மக்கள் 7 நாட்களுக்குள் காலி செய்யுமாறு அப்பகுதியில் உள்ள 45 குடும்பங்களுக்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய குடிசைவாசி ஒருவர், “நாங்கள் இங்கு இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால், டிரம்ப் வருகிறார் என காரணம் காட்டி எங்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த அரசாங்கம் எங்களை ஒருபொருட்டாக கூட பார்க்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் ஒருமணி நேர நிகழ்ச்சிக்காக இந்தளவிற்கு அரசாங்கம் செல்லும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலி செய்ய சொன்னவர்கள் நாங்கள் எங்கே போகவேண்டும் என சொல்லவில்லை. அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார். மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!