India
“பா.ஜ.கவின் நிழலாகவே செயல்படுகிறார் ரஜினி” - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடல்!
போலி வேடமிட்டு இருக்கும் பிரச்னைகளை மறைத்துவிடலாம் என பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கின்றனர் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வன்முறையில் யாரும் ஈடுபடவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் உள்ளே நுழைந்துள்ளது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், பல்கலை மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை, போலிஸார் அடித்து துன்புறுத்தியதால் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசு சட்டத்தை சரி செய்யாமல் போராட்டக்காரர்களை ஒடுக்க பல சக்திகளை பயன்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அதை தடுப்பது ஜனநாயகம் அல்ல. சர்வாதிகாரம் என்று நீதிமன்றங்களே கூறியிருக்கின்றன.
போலிஸாரின் நடுநிலையான விசாரணையோ நீதிமன்ற விசாரணையோ இருந்தால் உண்மை தெரியும். காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை தாக்கியதற்கு யார் பொறுப்பு? இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
வெளிநாட்டில் இருந்து எந்தவொரு தலைவர் வந்தாலும் அவர்களை குஜராத்துக்கு அழைத்து செல்வதுதான் பிரதமர் மோடியின் வழக்கம். மற்ற மாநிலங்கள் இருப்பதே அவருக்கு தெரியாது போலும். மேம்பாலத்தின் கீழ் மக்கள் குடிசை போட்டு வாழ்வது தான் குஜராத் மாநிலம். அதனை மறைக்கவே பல்வேறு பூசி மொழுகுதல் வேலைகளை செய்கின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும்போது குடிசைப் பகுதிகளை மறைத்து இந்தியா ஒளிர்கிறது என்று வாய் பேசுவது சரியல்ல.
ஏழை மக்கள் பிரச்னைகளை போக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. பொருளாதாரத்தை இழப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.
போலி வேடம் போட்டு மக்களை திசை திருப்பினால் அவர்கள் பல பிரச்னைகளை மறந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் எந்த பிரச்னைகளையும் மறக்க மாட்டார்கள். நாட்டிற்கு விரைவில் விடிவு காலம் வரும்.
நடிகர் ரஜினிகாந்த் போகும் பாதையைப் பார்க்கும்போதே பா.ஜ.க.வின் நிழலாக செயல்படுகிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. அதில், குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை.” எனக் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!