India
CAA சட்டத்தை எதிர்க்கும் 13 மாநிலங்கள்.. தமிழக அரசு மதவெறி சக்திகளுக்கு துணைபோகிறதா? :மார்க்சிஸ்ட் கேள்வி
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது மக்களிடையே பெரும் கொந்தள்ளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க அரசு மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகள் உள்பட அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு திரளாக வீதிக்கு வந்து அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் இந்தச் சட்டத்தை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மனிதச் சங்கிலி போன்ற வடிவில் போராடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசு இதுபற்றி எந்த அறிவிப்பையும் சட்டப்பேரவையில் வெளியிடவில்லை.
இதன் காரணமாக சென்னை, வண்ணாரப்பேட்டையில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டங்கள், பேரணி நடப்பதற்கு அனுமதியளிக்கும் தமிழக காவல்துறை, இச்சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது தடியடி தாக்குதல், கைது, சிறை, வழக்குப் பதிவது என தாக்குதல் தொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மதவெறி சக்திகளின் தூண்டுதலுக்கு இரையாகாமலும், மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை கோட்பாட்டை கடைபிடிக்கும் வகையிலும், 13 மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், மேற்கு வங்க மாநில அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் தமிழக அரசும் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!