India

வாட்டி வதைக்கும் வெயில்: “தொழிலாளர்களுக்கு பகல் 12 முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு” : கேரள அரசு அசத்தல்!

கேரளாவை ஆட்சி செய்யும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கடந்த 4 வருடங்களில் நூற்றுக்கணக்கான புதிய திட்டங்களையும், புதிய சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவந்து செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெண்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, பொதுமக்கள் எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் அளிக்கும் வசதி, தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பு, இலவச இணைய வசதி போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப் படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோடை மாதம் துவங்குவதற்கு முன்பாகவே கேரளாவில் வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு கேரளாவில் ஜனவரி முதல் வழக்கத்தைவிட அதிகமாக வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, 37 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கிறது. இந்த நிலைமை பல மாவட்டங்களில் நீடிப்பத்தால் தினசரி கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் காலையில் இருந்து மாலை வரை வெயிலில் வேலை செய்ய முடியாது என்பதால் குறிப்பிட்ட நேரம் ஓய்வு அளிக்கவேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பகல் 12 மணி முதல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும். திறந்தவெளியில் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். அரசின் இந்த உத்தரவை மீறி தொழிலாளர்களை கட்டாயமாக பணி செய்யுமாறு பணிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவினை தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பலரும் இந்த திட்டத்திற்கு தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை - 15,650 பேர் மீது வழக்குப் பதிவு” : கேரள அரசு அதிரடி!