India

“ஊருக்குள் வர வேண்டுமா?கோமியத்தை குடியுங்கள்” - கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு உ.பி பஞ்சாயத்தின் தண்டனை!

மனித நாகரிகம் பரிணாம வளர்ச்சியடைந்து எவ்வளவு தொலைவுக்கு உயர்ந்தாலும் பாகுபாடு என்ற கருத்தில் மட்டும் சற்று பின்தங்கிய மனநிலையிலேயே இருக்கின்றது. தொடர்ந்து வரும் சாதிய பாகுபாடுகள், ஆணவக் கொலைகள், தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றை அதற்கு உதாரணங்களாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்தியாவில் இதுபோன்ற சாதி ரீதியிலான ஆணவக் கொலைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுபோன்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எவ்வளவு சட்டதிட்டங்கள் கொண்டு வந்தாலும் எதற்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்றே ஒரு சாரார் முழங்கி வருகின்றனர்.

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்கெனவே சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்னைகளுக்கு பஞ்சமே இருக்காது. அதில், தீண்டாமையும் அடங்கும். அந்தவகையில், ஜான்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பிரேம் நகர் பகுதியில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு விநோதமான தண்டனையை கொடுத்திருக்கிறார்கள் கிராம பஞ்சாயத்தாரர்கள்.

பூபேஷ் யாதவ், ஆஷா ஜெயின் என்ற பெண்ணை கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி கலப்புத் திருமணம் செய்திருக்கிறார். இதை கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்து அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூகத்தை வழிநடத்தும் பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அந்த பஞ்சாயத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு பூபேஷ் தம்பதியினர் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இதற்கு, உங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்றால் கலப்புத் திருமணம் செய்ததற்காக இருவரும் மாட்டு சாணத்தை சாப்பிட்டு, அதன் கோமியத்தை குடித்து, பஞ்சாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த பூபேஷ் யாதவும், ஆஷா ஜெயினும் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். அவர்களின் புகாரை கேட்ட மாஜிஸ்திரேட், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

பின்னர், சம்மந்தப்பட்ட பஞ்சாயத்துதாரர்களிடம் கலப்புத் திருமணம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் சட்டம் குறித்து எடுத்துச் சொல்லி, இனி அந்த தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸார் எச்சரித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பிரேம் நகரில் உள்ள குற்றச்சாட்டுக்கு ஆளான பஞ்சாயத்து இயக்கம் சட்டவிரோதமாது என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது.