India
“எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்; புகார்தாரரிடம் உயரதிகாரிகள் பேசுவார்கள்”: கேரள அரசு புதுதிட்டம்!
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வெற்றியும் அடைந்துள்ளது. குறிப்பாக திட்டங்களை செயல்படுத்துவதற்கென ஒரு துறையை அமைத்து அதை நடைமுறைப்படுத்தும் பணிகளில் முழுவிச்சீல் கேரள அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான காவல்நிலையங்களில் அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்டு நடக்கும் சம்பவம் தொடர்பான புகார்களையே ஏற்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இதனால் புகார் அளிக்கச் செல்பவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு கேரளாவில் இந்த நடைமுறையை பினராயி விஜயன் மாற்றியுள்ளார். இதுதொடர்பாக 3 புதிய திட்டங்களை கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, கேரளாவில் எந்தப் பகுதியிலும் யார் வேண்டுமானாலும் தங்கள் புகாரை காவல் நிலையத்தில் அளிக்கலாம். அந்த புகாரை சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் பொதுமக்கள் அலைச்சல் இன்றி புகார் கொடுக்கமுடியும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், இரண்டாவது திட்டம் பெண் காவலர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. முன்னதாக, பெண் காவலர்களை பெண் காவலர், பெண் ஆய்வாளர், பெண் உதவி ஆய்வாளர் என அழைக்கும் நடைமுறை இருந்தது.
ஆனால் இனி அப்படி அழைக்கத் தேவையில்லை என்றும் பெண் காவலர்களை சிவில் போலிஸ், பெண் காவல் அதிகாரிகளை சீனியர் சிவில் போலிஸ் ஆபீஸர் எனவும் அழைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு நட்பு ஆண்டு என அறிவிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டி.ஜி.பி லோக்நாத் பெகரா தெரிவித்துள்ளார்.
மூன்றாவது திட்டமானது, காவல்துறை அனுபவங்கள் குறித்து உயர் போலிஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி காவல்நிலையங்களில் புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் மாவட்ட எஸ்.பி மற்றும் உயரதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்பார்கள்.
வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 10 பேரை போனில் தொடர்புகொண்டு இந்த விபரங்களைக் கேட்டு அறிந்துகொள்வார்கள். அதில் பொதுமக்களுக்கு காவல்துறை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டத்தால் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவார்கள், குறிப்பாக மனுதாரர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவார்கள், புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் அரசுக்கு தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!