India

இறந்த IT ஊழியர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி - ஐதராபாத்தை அதிரவைத்த சைபர் கிரைம்

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டுவரும் தனியார் வங்கி ஒன்று கடந்தவாரம் சைபராபாத் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளது.

அந்த புகாரில், ”பாலப்பர்த்தி ரகுராம் என்பவர் தங்கள் வங்கியில் 2,76,000 கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றார். ஆனால் தற்போது வரைக் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றும் அவரைத் தொடர்புக் கொள்ளமுடிவில்லை எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரவேண்டும்.” என மனு அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட தெலங்கானா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. புகாரளிக்கப்பட்ட அந்த நபர் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. இறந்தவர் எப்படி அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியும்? அல்லது இறந்தவரின் உறவினர்கள் யாரேனும் பயன்படுத்தினார்களா என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் தான் ஒரு கிரிமினல் மோசடி கும்பல் பற்றி கண்டறிந்தது போலிஸ்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனிசவுத்ரி, செரூப்நாத் சவுத்ரி, ஸ்ரீனிவாசராவ், ஹரிஷ், வேணுகோபால், வீர சேகரராவ் ஆகிய 6 பேரும் ஐதராபாத் குட்கட்பல்லியில் இருந்தபடி செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விபத்தில் இறந்தவர்கள் பட்டியலை சேகரித்துள்ளனர். குறிப்பாக ஐ.டி துறையில் பணிபுரிந்தவர்களை மட்டுமே அவர்கள் குறிவைத்துள்ளனர்.

இறந்தவர்கள் பற்றிய தகவல் மூலம், சமூக வலைத்தளங்களில் அவர்களின் விவரங்களை சேகரித்து போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர். பின்னர் அந்த ஆவணங்களை வைத்தே சிம் கார்டுகளை பெற்று, வங்கிகளில் கடன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.

கடந்த 2019 செப்டம்பரில் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ரேப்பாக்குலா விஷ்ணுகுமார் என்ற ஐடி ஊழியரின் ஆவணங்களை தயார் செய்து, அவரது பெயரில் சிம்கார்டு பெற்று , தனியார் வங்கியில் ரூ.2,13,000 கடனும் பெற்றுள்ளனர்.

இதேபோல் பல்வேறு தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ12 லட்சத்து 66 ஆயிரம் கடனாகவும், ரூ5 லட்சத்து 48 ஆயிரம் கிரெடிட் கார்ட் மூலமும் பெற்றுள்ளனர். இப்படி 20க்கும் மேற்பட்ட இறந்த ஐ.டி ஊழியர்களின் பெயர்களை பயன்படுத்தி போலி ஆவணம் தாயாரித்து பல்வேறு வங்கிகளில் மோசடி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பெரும்பாலன கடன்களை ஆண்லைன் மூலம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து 53,00,000 ரூபாய் ரொக்கப்பணமும், செல்போன்கள், சிம்கார்டுகள், ஒரு கார் மற்றும் போலி அடையாள அட்டை, அச்சு இயந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான வங்கிகள் ஐடி ஊழியர்களுக்கு கடன் வழங்குவதை குறிக்கோளாக வைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் தனியார் வங்கிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, சில தனியார் வங்கிகள் கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குவதில் எந்த வித விசாரணையும், கள ஆய்வு மேற்கொள்ளாமல் ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பெற்று அவரவர் சம்பளத்திற்கு ஏற்ப கடன்களை வழங்கி வருகின்றன.

Also Read: “உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் மறந்துவிட்டார் மோடி” - ப.சிதம்பரம் காட்டம்!

முறையாக விசாரித்து கடன் வழங்கவேண்டும் என்றும் பொதுமக்களும் தங்களின் தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யாமல் ரகசீயமாக வைத்து கொள்ளவேண்டும் என போலிஸார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “Paytmல இருந்து பேசுறோம்... OTP நம்பர் சொல்லுங்க” - பாமர மக்களை குறிவைக்கும் வங்கி மோசடி கும்பல்!