India

“மதுரவாயல் மேம்பாலம் திட்டம் என்ன ஆனது?” - திருச்சி சிவா கேள்விக்கு அமைச்சர் பதில்!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான சாலை திட்டப்பணிகள் குறித்து மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா எம்.பி., “சென்னை துறைமுகம் - மதுரவாயலுக்கிடையே உயர் மேம்பாலம் கட்டத் திட்டமிட்டப்பட்டுள்ளது. அது எப்போது கட்டப்படும், இல்லாவிடில் அதற்கான காரணங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அளித்துள்ள பதில் வருமாறு :

“இந்தத் திட்டம் முதலில் 6.1.2009 அன்று கட்டி, செயல்பட்டு ஒப்படைப்பு (பி.ஓ.டி) அடிப்படையில் துவங்கப்பட்டது. இலவச நிலம், கூவம் நதியின் மேல் கட்ட வேண்டி உள்ளதால், எதிர்ப்பில்லாச் சான்றிதழ் தர தமிழக அரசு தர மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் 8.4.2016 அன்று கைவிடப்பட்டது.

அதன் பின்னர் இந்தத் திட்டம் மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூவம் நதிக்கரைப் பகுதி சீரமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் தருதல், சுற்றுச் சூழல் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தமிழக அரசு சரி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

அதையடுத்து விரிவான திட்ட அறிக்கை 20.5 கி.மீ. நிலத்திற்கானது தயாரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தத் திட்டத்தை பொறியியல் கொள்முதல் கட்டுமான அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர்கள் கோரும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கட்டிட நடவடிக்கைகள், இலவச நிலம் பெறுதல், சிவில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை முடிந்தவுடன் இந்தத் திட்டத்திற்கான பணிகள் ஒப்படைக்கப்படும்.”

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.

Also Read: "ஹைட்ரோகார்பன் தொடர்பான புதிய அரசாணையை திரும்பப் பெற வேண்டும்" : மாநிலங்கவையில் திருச்சி சிவா ஆவேசம்!