India
CAAக்கு எதிரான போராட்டத்தில் 4 மாத குழந்தை பலி;ஒரே வாரத்திற்குள் போராட்டக் களத்திற்கு திரும்பி வந்த தாய்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பெண்கள் பங்கேற்று இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி இளைஞர்களால் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தை போல டெல்லியில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு இந்த உரிமை போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் இளையோர், முதியோர் என வயது வித்தியாசம் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மத்தியில் ஜஹான்கான் என்ற 4 மாத ஆண் குழந்தை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறான். முகமது ஆரிஃப் மற்றும் நசியா தம்பதியின் மகன்தான் முகமது ஜஹான்கான்.
வாட்டி வதைக்கும் குளிரில் இந்த குழந்தையும் போராட்டத்தில் பங்கேற்று தேசியக் கொடியை கையில் ஏந்தியது அண்மையில் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், கடந்த வாரம் ஜனவரி 30ம் தேதி இரவு போராட்டக்களத்தில் இருந்து வீடு திரும்பிய நசியா குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை எழுந்ததும் குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நசியாவும், ஆரிஃபும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு பனியின் காரணமாக கடுமையான காய்ச்சலுக்கு ஆளான குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இது நசியா மற்றும் ஆரிஃபை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், தனது மகன் உயிரிழந்து ஒருவாரம் ஆன நிலையில், மீண்டும் ஷாகீன் பாக் போராட்டக்களத்துக்கு வந்துள்ளார் நசியா. போராட்டக்காரர்கள் குழந்தை குறித்து கேட்டபோது, இனி ஜஹான் வரமாட்டான் என உருக்கமாக நசியா கூறியிருக்கிறார். அப்போது காய்ச்சல் காரணமாக தூக்கத்திலேயே குழந்தை ஜஹான் உயிரிழந்திருக்கிறான் என்ற செய்தி ஷாகீன் பாக்கில் இருந்த போராட்டக்காரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு