India
“வரலாற்று நிரூபணங்களைத் திரிக்க முயற்சிக்கிறார் நிர்மலா சீதாராமன்” - சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்!
தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உட்பட இந்தியாவின் 5 இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது குறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ மண் பறித்து உண்ணேல். நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார்.
"சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார்.
வேத பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரப்பூர்வமான குரலாக நிதியமைச்சரின் குரல் அவையில் எதிரொலிக்கிறது.
நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால் வேதத்தில் செங்கலையும் பானையையும் செய்பவர்கள் அசுரர்கள் என்று வசைபாடப்படுகிறார்கள். பின் எப்படி உங்களை நாகரிகவாதி என்று உரிமை கொண்டாடுகிறீர்கள்? உங்களுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்கலையும் பயன்படுத்தி ஹோமம் செய்து, பின்னர் கலைத்துவிட்டுப் போகிற பழக்கத்தைத் தான் வேத காலத்தில் பார்க்க முடிகிறது.
சடங்குகள் பற்றிய வேத இலக்கிய குறிப்பில் சதபத பிராமனத்தில் அக்னிசேனா என்ற சடங்கிற்குத்தான் முதன்முதலில் செங்கலைப் பற்றிய குறிப்பே வருகிறது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்டசெங்கல் பயன்பாட்டினை பார்க்க முடியும். எனவே இதுவரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினை புராணங்களோடு இணைத்து உங்களின் கதைகளை தேசத்தின் வரலாறாக மாற்ற நினைக்காதீர்கள்.
நீங்கள் அறிவித்துள்ள ஆதிச்சநல்லூருக்கான தொல்லியல் திட்டத்தையும் இந்தப் பிண்ணனியை விலக்கிவிட்டுப் பார்க்கமுடியவில்லை.
ஒளவை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல்” என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடம்தான் மண். அதனை ஒருபோதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது.” இவ்வாறு சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!