India

பணமதிப்பிழப்புக்கு முன்பே KYC மூலம் NPR-ஐ புகுத்த சதித் திட்டம் தீட்டிய மோடி அரசு!

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் என இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்களை பாஜக அரசு கொண்டு வந்ததற்கு நாடு முழுவதும் இதுகாறும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அறபோராட்டமும், சட்ட போராட்டமும் இந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இருப்பினும், தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அவற்றை அமல்படுத்தியுள்ளது மோடி அரசு. இது மட்டுமல்லாமல் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற பெயரில் பின் வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் என்.ஆர்.சி-யையும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் என பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பே ரிசர்வ் வங்கியின் மூலம் என்.பி.ஆரை கொண்டு வர மத்திய மோடி அரசு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2015ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் விடுத்த அறிவிக்கையில், வங்கிகளுக்கான கே.ஒய்.சி( KYC) படிவத்தில் என்.பி.ஆர் அடையாள எண்ணையும் ஆதாரமாக சேர்க்கும் படி அறிவுறுத்தியது.

அந்த அறிக்கையில், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான அடையாள அட்டை, பெயர், முகவரி உட்பட தேசிய மக்கள்தொகை பதிவாளர் அளித்த படிவத்தையும் கே.ஒய்.சிக்கான ஆவணங்களாக எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நிதியமைச்சகம் 2015ல் விடுத்த அறிக்கையை 2018 ஏப்ரல் மாதத்தில்தான் ரிசர்வ் வங்கி கே.ஒய்.சி-யில் என்.பி.ஆரை சேர்த்துள்ளது. ரிசர்வ் வங்கி தரப்பில் இது தொடர்பாக கூறுகையில், வங்கிக் கணக்குக்கான கே.ஒய்.சி விண்ணப்பிக்கும் போது என்.பி.ஆர் ஆவணமும் ஒன்றாக உள்ளது. அதனை கட்டாயம் வழங்க வேண்டும் என நிபந்தனை இல்லையென தெரிவிக்கப்பட்டது.

ஆர்.பி.ஐ. இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

ஏற்கெனவே என்.ஆர்.சி. சி.ஏ.ஏக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் என்.பி.ஆருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொதுத்துறை வங்கியின் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது மக்களின் கோபத்தை மேலும் அதிகபடுத்தியுள்ளது.

Also Read: CAA-வுக்கு ஆதரவாக விளம்பரம்?: வங்கி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கணக்கை ரத்து செய்ய குவிந்த மக்கள்!