India

“ஹைட்ரோகார்பன் திட்டம் அபாயத்தின் அறிகுறி” : அரசுக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு எச்சரிக்கை!

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை என திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசு அரசிதழில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மத்திய அரசு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும், பொதுமக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை அரசு கூறியிருப்பதற்கு தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அக்.9-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தமிழகத்தில் மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என கடிதம் கொடுத்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில், கருத்து கேட்புக்கூட்டம் நடத்தத் தேவையில்லை என ஒரு மாநில அமைச்சர் கூறியிருப்பது, அவரின் பொறுப்பற்ற தன்மைக்குச் சான்று. இது அபாயத்தின் அறிகுறி. ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கான திட்டமே தவிர, மக்களுக்கான திட்டம் அல்ல. மத்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு, தமிழகத்தில் நுழையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாநில அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஜனநாயக உரிமை. இந்நிலையில், அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் அபாயகரமானவை என்பதால், கட்டாயம் விரிவான அளவில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவேண்டும். இதுதான் மக்களுக்கும், மண்ணுக்கும் கிடைத்திருக்கிற பாதுகாப்பாக அமையும். எனவே, கருத்து கேட்புக் கூட்டம் தேவையில்லை என்ற கருத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” - பா.ஜ.க அரசின் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!