India

தனியார் மயமாகும் ஏர் இந்தியா... கேள்விக்குறியாகும் ஊழியர்களின் வேலை... 

மோடியின் பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதையே மும்முரமாக செய்து வருகிறது.

ஏற்கெனவே பாரத் பெட்ரோலியம், நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றுள்ளது பாஜக அரசு. அந்த வரிசையில் தற்போது ஏர் இந்தியாவும் இணைந்துள்ளது.

கடன் சுமையை காரணம் காட்டி ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 76 சதவிகித பங்கு மூலதனத்தை மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தில் வைத்துள்ளது. தற்போது இந்த பங்குகள் முழுவதுமாக தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும், பங்கு விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே நாட்டில் வேலைவாய்ப்புக்கே வழியில்லை என்ற நிலையில் இருக்கையில் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதின் மூலம் இருக்கும் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஊழியர்கள் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.