India

“தனிநபர் கருத்து சுதந்திரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை” - காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆணை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை மத்திய மோடி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்வதாக அறிவித்தது.

அதனோடு, ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சாமானிய மக்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் அடைத்து சர்வாதிகாரப் போக்கை நிலைநாட்டியது பா.ஜ.க. இணையம், தொலைப்பேசி உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளையும் முடக்கி மக்களை பெரிதும் அவதியுற வைத்தது.

இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் முடங்கியது மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருக்கும் தங்களுடைய உற்றார் உறவினர்களின் நிலை குறித்து அறிய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தொலைதொடர்பு சேவை முடக்கப்பட்டது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பை வாசித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்த கருத்துகளின் விவரம். “ஜம்மு-காஷ்மீரில் இணையதள முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையதள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மக்களுக்கு மறுக்கக்கூடாது என்றும், 144 தடை உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை, வன்முறைச் சம்பவங்களின் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் வகையில் 144 தடை உத்தரவை இயந்திரகதியில் தொடர்ந்து அமல்படுத்துவது ஏற்க முடியாது. மத்திய மாநில அரசுகளின் இந்த செயல் அதிகார துஷ்பிரயோகம் என்ன ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல்கள் குறித்து ஆய்வு செய்ய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

அனைத்து அத்தியாவசிய சேவைகளும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனிநபரின் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.”