India

“இணைய சேவையை முடக்குவது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது” - மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும் என்று நீதிபதிகள் என்.வி.ரமணா, சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. காலவரையின்றி இணையதள சேவையை முடக்கக்கூடாது என்றும், இணையதள சேவை பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்தது.

மேலும் இதனால் போராட்டங்கள் வெடித்துவிடும் என்பதனால் மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, மொபைல் மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இன்னும் 144 தடை உத்தரவு நீடித்து வருகிறது.

இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில், பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், 144 தடை தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் மாநில அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை என்பதை தெரியப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி, ஆன்லைன் வழியே வர்த்தகம் செய்வதும் அடிப்படை உரிமையே. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தில் இணையதள சேவை பெறும் உரிமையும் அடங்கும்.

இணையதள சேவையை காலவவரையின்றி முடக்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும், நியாயமான கருத்து சுதந்திரத்தை 144 தடை மூலம் ஒடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் 144 தடை தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் மாநில அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், அடிப்படை சேவைகள் அனைத்துக்கும் இணையதள சேவையை உடனடியாக வழங்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் 7 நாட்களுக்குள் மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Also Read: “காஷ்மீரில் குண்டு சத்தமே கேட்கவில்லை” : ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா பேச்சு!