India

2020ன் முதல் நாடாளுமன்றக் கூட்டம்,  மத்திய பட்ஜெட் தாக்கல் தேதி வெளியானது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குவதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாகவும், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதன் பிறகு, பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, மார்ச்2 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.