India

“தைரியத்தை இழக்காதீர்கள்; நாடே உங்களுடன் நிற்கிறது” : ஜே.என்.யூ மாணவர்களுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு!

டெல்லியில் ஜே.என்.யூ விடுதி கட்டண உயர்வை எதிர்ப்பு அப்பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி என்ற இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டு விடுதி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது.

இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலர் கண்டனம் தெரிவித்ததோடு மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜே.என்.யூவில் இந்துத்வா கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் உள்ளிட்டோரை தி.மு.க மக்களவை துணைத் தலைவர் கனிமொழி எம்.பி இன்று நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

Also Read: "அவங்கள இப்போ அடிக்கலனா எப்போ அடிக்கிறது?” - JNU வன்முறைக்கு முன் நடந்த ’பகீர்’ உரையாடல்! #FactCheck

மேலும், இந்துத்வா கும்பலால் சூறையாடப்பட்ட ஜே.என்.யூ பல்கலை விடுதியையும் கனிமொழி பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களை ஒடுக்கிவிட்டால் அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என மத்திய அரசு கருதுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் நிற்கிறது. தைரியத்தை இழந்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க மாணவர்களுக்குத் துணையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, தாக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்கவேண்டும். தாக்குதலுக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், தாக்குதலுக்கு துணைபோன பல்கலை. துணைவேந்தர், பேராசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் தன்னிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறியுள்ளார்.