India

“கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள் உயிருடன் இருக்கிறார்கள்” - சிபிஐ தெரிவித்த ‘பகீர்’ தகவல்!

பீகார் முசாபர்பூர் காப்பகத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 35 சிறுமிகள் உயிருடன் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ கூறியுள்ளது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கள் காப்பகத்தில் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் 35 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.

இளம்பெண்களுக்கு போதைப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி, ஆபாச நடனம் ஆடவைத்ததாக அரசு காப்பகம் மீது புகார் எழுந்ததோடு இதில் பல அரசியல் புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. டாடா இன்ஸ்டிட்யூட் சமூக விஞ்ஞானத்துறை ஆய்வின் மூலம் இந்தப் பாலியல் வன்கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. பத்திரிகையாளர் நிவேதிதா ஜா உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு சி.பி.ஐ தரப்பில், அரசியல் செல்வாக்கு மிகுந்த காப்பக உரிமையாளர் பிர்ஜேஷ் தாக்கூர் மற்றும் அவரது கூட்டாளிகள் 11 சிறுமிகளை கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகவும், ஒரு மூட்டையில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ, அந்த 2 எலும்புக்கூடுகள் வயதான ஆண் மற்றும் பெண்ணினுடையது என்று தெரிவித்தது. இதுகுறித்து, சி.பி.ஐ தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போது, கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட சிறுமிகள் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சி.பி.ஐ சமர்ப்பித்த நிலை அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.டே.பாப்டே தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது. இன்று மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஷோயப் ஆலம் , காப்பகப் பெண்கள் பலர் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் பற்றிக் கூறிய புகார்களை சி.பி.ஐ கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Also Read: ’சக மாணவியை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும்’ - 14 வயது சிறுவர்களின் WhatsApp உரையாடல்: பெற்றோர் அதிர்ச்சி