India

“JNU மாணவர்களை குறிவைத்து தாக்கிய ABVP கும்பலை கைது செய்க” - மாணவர்களை சந்தித்த திருச்சி சிவா வேண்டுகோள்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் இயக்கமான ஏ.பி.வி.பி அமைப்பினர் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. அந்த மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை டெல்லி காவல்துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சகத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் வன்முறையாளர்கள் மீது எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்துத்வ வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளான ஜே.என்.யூ மாணவர்களை தி.மு.க மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா எம்.பி.., நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தி.மு.க தலைவர் அறிவுறுத்தல் படி தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை சந்தித்ததாகத் தெரிவித்த திருச்சி சிவா, காஷ்மீர் மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களைக் குறிவைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், தாக்குதலுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 90 நாட்களுக்கும் மேலாக கல்வி கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிவரும் மாணவர்களை ஒடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், துணைவேந்தரின் ஒத்துழைப்போடுதான் தாக்குதல் நடந்திருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆளுங்கட்சி மற்றும் பல்கலை. நிர்வாகத்தின் ஆதரவோடு நடைபெற்ற ஏ.பி.வி.பி அமைப்பினரின் இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பல மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்துவருகின்றனர்.

Also Read: “ABVP-யும் - பல்கலை. நிர்வாகமும் கூட்டு சதி” : ஜே.என்.யூ தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!