India

"அவங்கள இப்போ அடிக்கலனா எப்போ அடிக்கிறது?” - JNU வன்முறைக்கு முன் நடந்த ’பகீர்’ உரையாடல்! #FactCheck

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்கிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேறைய தினம் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஏ.பி.வி.பி அமைப்பினர் இடதுசாரி மாணவர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்தகாயம் அடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யே காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்துத்வா மற்றும் ஏ.பி.வி.பி மாணவர்கள் திட்டமிட்டது தொடர்பான தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று இந்துத்வா மற்றும் ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வாட்ஸ்அப் குழுவில் பேசியதும் அதற்காக இந்துத்வ ஆதரவு மாணவர்களை இணைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த வாட்ஸ்அப் குழுவிற்கு ‘unity against left’ என்ற பெயர் வைத்துள்ளனர்.

அதேபோல், மாலை 5.39 மணிக்கு, ‘Friends of RSS’ - ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள் என்ற பெயருடைய மற்றொரு வாட்ஸ்அப் குழுவில், ஒருவர் செய்தி அனுப்பியுள்ளார். அதில், “இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமைக்காக இந்த குழுவில் சேருங்கள். அவர்களை அடிக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கான ஒரே சிகிச்சை ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அதற்கு பதிலளித்த ஒருவர், “கஸன்சிங் நீச்சல் அகாடமி பக்கத்திலிருந்து டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழையுங்கள். நாங்கள் இங்கே 25-30 பேர் இருக்கிறோம்” என்று பதில் அளித்துள்ளார்.

கஸன்சிங் நீச்சல் அகாடமி ஜவஹர்லால் பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ளது. அதன் அருகில் ஒரு தனி நுழைவுவாயில் உள்ளது. இருப்பினும், பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில், பார்வையாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு சோதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களை இந்த வழியைப் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த செய்தியை பகிர்ந்தவரின் செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அந்தச் செய்தியை பகிர்ந்தவர் விகாஸ் படேல் என்றும், அவர் ஏ.பி.வி.பி-யின் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஜே.என்.யு-வில் ஏ.பி.வி.பி-யின் முன்னாள் துணைத் தலைவர் என்றும் அவரது பேஸ்ஃபுக் சுயவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இரவு 7.03 மணியளவில், வாட்ஸ்அப் வழியே அனுப்பப்பட்ட செய்தியில், “நாங்கள் அவர்களின் சபர்மதி விடுதிக்குள் நுழைந்து அவர்களை அடித்தோம். அதற்கு மற்றொருவர், “நிச்சயமாக, அனைத்தையும் தீர்க்கவேண்டிய நேரம் இது. இப்போது அவர்களை அடிக்கவில்லை என்றால், எப்போது? ‘கோமியோ’ (கம்யூனிஸ்டுகள்)” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இரவு 8.41 மணியளவில், “இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை” என்ற வாட்ஸ்அப் குழுவில், “காவல்துறை வந்துவிட்டதா? இடதுசாரிகளும் இந்த குழுவில் சேர்ந்துள்ளனர். இணைப்பு எப்படி பகிரப்பட்டது? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியை பகிர்ந்தவர் எண்ணை ஆய்வுக்கு உட்படுத்திய போது, டெல்லியில் உள்ள ஏ.பி.வி.பி-யின் மாநில செயற்குழு உறுப்பினரும், 2015-16ம் ஆண்டில் ஜே.என்.யுவில் ஏ.பி.வி.பியின் முன்னாள் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த ஒன்கர் ஸ்ரீவஸ்தவாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.

ஏ.பி.வி.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அல்லாத ஆர்வலர்கள் வாட்ஸ்அப் குழுவில் invite சுட்டியைப் பயன்படுத்தி புழக்கத்தில் விட்டு, அதன்மூலம் மற்ற மாணவர்களை இந்தக் குழுவில் சிக்கவைக்கும் உத்தியாக இதைச் செய்துள்ளனர்.

மேலும், அரசியல் ஆய்வாளர் சிவம் சங்கர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “முஸ்லிம்களையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் வன்முறைக்கு காரணமானவர்களாக மாற்றும் உத்தியாக, அந்தக் குழுவில் சேர்த்துவிட்டு பின்னர் வலதுசாரி ஆர்வலர்கள் மொத்தமாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலை ஏ.பி.வி.பி மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உதவியோடு செய்திருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Also Read: “ABVP-யும் - பல்கலை. நிர்வாகமும் கூட்டு சதி” : ஜே.என்.யூ தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!