India
12 மாதங்கள்.. 12 தவறான நடவடிக்கைகள் : இந்தியாவை சிதைத்த மோடி அரசின் துரோகங்கள் #Rewind2019
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பா.ஜ.க அரசு மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை பாதாளத்தில் தள்ளினாலும், இந்து-இந்தி-இந்தியா என்கிற கோஷத்தை முன்வைத்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
கடந்த முறையைப் போல் இல்லாமல், இந்த இரண்டாவது 5 ஆண்டுகளில் மக்கள் விரோத திட்டங்களை தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்துடன் செயல்படுத்த முனைந்து வருகிறது. இதில் 2019-ம் ஆண்டு, ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு மோசமான நடவடிக்கைகளையும், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை பிறழாமல் செய்து வந்துள்ளது.
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் பா.ஜ.க அரசு திட்டமிட்டு பாதகமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை பா.ஜ.க அரசின் மோசமான திட்டங்களையும், தவறுகளையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.
01. ஜனவரி :
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஆனால் அப்போது நாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், பா.ஜ.க-வால் இந்த சட்டத்தைக் கொண்டு வரமுடியவில்லை. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிட கடந்த ஒரு ஆண்டாக பா.ஜ.க முயற்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
02.பிப்ரவரி :
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த தாக்குதலால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. அதுமட்டுமின்றி, உண்மையாக இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்றும், நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு மத்தியிலும் வரவிருந்த தேர்தலுக்காக பா.ஜ.க செய்த சதி திட்டம் என அரசியல் கட்சியினரால் அப்போது கூறப்பட்டது. இப்போது வரை அப்படி ஒரு தாக்குதல் நடந்ததற்கான எந்தவித ஆதாரத்தையும் பா.ஜ.க சமர்பிக்கவில்லை. ஆனால், அதைப் பேசியே 2019ல் ஆட்சியைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
03. மார்ச் :
இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லையாவையே பிடிக்கமுடியாமல் போன காலகட்டத்தில், அடுத்து ஒரு முறைக்கேட்டில் ஈடுபட்டு வைர வியாபாரி நிரவ் மோடி தப்பிச் சென்றது இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை இந்திய அரசே அனுப்பி வைத்தாதாகவும் தற்போது வரை குற்றம் சாட்டப்படுகிறது.
04.ஏப்ரல் :
தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 9 நபர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செயலர்களாக நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பதவிகளில் முதன் முறையாகத் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டனர்.
இதன் மூலம் தனக்கு வேண்டப்பட்டவர்களையும், தன்னுடைய RSS கொள்கைகளுக்கு சாதகமானவர்களையும் முக்கியப் பதவிகளில் அமர்த்திக் கொண்டது பா.ஜ.க.
05. மே :
2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவுக்கு காவி பூச முனைந்து, இதற்கடுத்த மாதங்களில் மிகப்பெரிய தவறுகளைச் செய்யத் தொடங்கியது.
06. ஜூன் :
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவரும், நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகிக்கப்பட்டவரும், இந்துத்துவா கொள்கைகளை பேசிவந்த அமித்ஷா இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டதும் நாடு முழுவதும் மத ரீதியிலான தாக்குதல்கள் தலையெடுக்கத் தொடங்கின.
07. ஜூலை :
இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாஜக அரசு, உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் ‘முத்தலாக் தடை மசோதா’வை மக்களவையில் நிறைவேற்றியது. சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களுக்கு இந்த சட்டம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
08. ஆகஸ்ட் :
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. சிறப்பு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது
ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவையுடன் லடாக், சட்டப்பேரவை இல்லாத யூனியப் பிரதேசமாகவும், செயல்படும் வகையில் ‘ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா’ மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஆகஸ்ட் 6ம் தேதி நிறைவேறியது.
அதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
மேலும், மாநிலம் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாக, வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற பொய்யை பா.ஜ.க அரசியல் கட்சி தலைவர்கள் சரளமாக பேசிவருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராக போராடுபவர்களை பா.ஜ.க அரசு சிறையில் தள்ளுவதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாயின.
09. செப்டம்பர் :
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான பா.சிதம்பரத்தை, 14 நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்து வருவது குறித்து பேசி வந்த ப.சி, எந்தவித முகாந்திரமும் இல்லாமல், கைது செய்யப்பட்டு, 100 நாட்களைத் தாண்டி திகார் சிறையில் இருக்க நேர்ந்தது.
10. அக்டோபர் :
மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர் பா.ஜ.க 105, சிவசேனாவை 56 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44, 54 இடங்களில் வெற்றி பெற்றன.ஆட்சி அதிகாரத்தில் சக பங்கு கோரியதால், பாஜக – சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது.
இருப்பினும் மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க சுதந்திர இந்தியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு மோசடிகளை, நிகழ்த்திப் பார்த்தது. இறுதியில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மஹாராஷ்டிராவில் அமைந்தது.
11. நவம்பர் :
மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், அங்கு எப்படியாவது, ராமர் கோவில் கட்டுவது என்பதில் பா.ஜ.க முனைப்பு காட்டி வருகிறது.
12. டிசம்பர் :
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லுரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் தற்போதுவரைத் தொடர்ந்து வருகிறது.
நாட்டின் நிலை இப்படி இருக்க.. ஒவ்வொரு மாதமும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள், தொழிலை நடத்த முடியாமல் இழுத்து மூடிவருகின்றனர்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையின்மை நிலவி வருகிறது.செல்லா நோட்டு நடவடிக்கை, GST நடவடிக்கை ஆகியவை, எந்தவகையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனம். இதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் கார்ப்ரேட்டுகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது என்று பகீங்கர குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இன்னும் 4 ஆண்டுகள் எஞ்சி இருக்கும் நிலையில், இந்தியாவை பா.ஜ.க இன்னும் என்னவெல்லாம் பாடுபடுத்தப்போகிறதோ ? என்கிற அச்சம் மக்கள் மனதில் எழாமல் இல்லை.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!