India
“இராணுவ தளபதி அரசியல் கருத்தை வெளிப்படையாகச் சொல்வது ஆபத்தானது” : வைகோ கண்டனம்!
இந்திய இராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் போராட்டங்களை வன்முறை எனக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் விதமாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் வெடித்துள்ளன. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களும், இளைஞர்களும் லட்சக்கணக்கில் வீதிக்கு வந்து போராடுகின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது பல இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 22 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய இந்திய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் பிபின் ராவத், “மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல, ஏராளமான பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல” என்று கூறி இருக்கின்றார்.
விடுதலை பெற்ற இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் இராணுவத் தளபதி ஒருவர் உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதோ, கருத்துக் கூறியதோ இல்லை. ஆனால் தற்போது இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதும், மாணவர்களை வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் இல்லை என்று மறைமுகமாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்திருப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கண்டனத்துக்கு உரியதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமைத் தளபதியை நியமனம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
முப்படைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தலைமைக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், ஜனநாயக நாட்டில் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.
சீருடைப் பணியாளர்கள் மற்றும் சீருடை உயர் அலுவலர்களுக்கு என்று அரசு வகுத்துள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், மரபையும் மீறி கருத்துத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமைத் தளபதி உடனடியாக மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்