India

"குழந்தைகளை மண்ணில் புதைத்தால் நோய் அண்டாது” - Solar Eclipse மூடநம்பிக்கையால் தாய்மார்களின் விபரீத செயல்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் நெருப்பு வளைவு போல காட்சியளிக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இந்த கிரகணத்தை பல்லாயிரக் கணக்கானோர் சிறப்பு கண்ணாடிகளை கொண்டு பார்வையிட்டனர். காலை 8 முதல் 11.30 வரை இந்நிகழ்வு தமிழகம், கேரளா, கர்நாடக என நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது.

கிரகணங்கள் நிகழும்போது, உணவு உண்ணக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது, கர்ப்பிணி பெண்கள் வெளியே என்றால் கருவில் உள்ள சிசுவுக்கு ஆபத்து நேரும் என்பது போன்ற மூடநம்பிக்கைகள் பாமர மக்களிடையே இருந்து வருகிறது.

இது போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கிய கர்நாடகாவைச் சேர்ந்த மக்கள், தங்கள் குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்து விபரீதத்தை நிகழ்த்தியுள்ளனர். கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தாஜ்சுல்தான்புர் எனும் பகுதியில் கிரகண நிகழ்வின்போது, அந்த ஊர் மக்கள் தங்களுடைய 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்தனர்.

இன்றைய அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தின் போது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு எவ்வித நோயும் அண்டாது என்றும், உடலில் எந்தக் குறைபாடும் ஏற்படாது என்றும் தாஜ்சுல்தான்புர் பகுதி மக்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே, தங்களது குழந்தைகளை கிரகண சமயத்தில் மண்ணில் புதைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இயற்கையாக நிகழும் நிகழ்வுகளின் போது இதுபோன்ற மூடநம்பிக்கைகளால் தவறாகச் செயல்படுவதால் எந்த பலனும் இல்லை என்றும், கிரகணத்தின் போது சில நடைமுறைகளை கடைபிடித்தால் நலம் பயக்கும் என விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: சூரிய கிரகணத்தின்போது உணவு உண்ணக்கூடாதா? - மூடநம்பிக்கைகளை உடைக்க திராவிடர் கழகம் செய்த ஏற்பாடு!