India

“பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிட்டு, பொருளாதாரத்தை மீட்கும் வழியைப் பாருங்கள்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்திய பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கான போதிய பணம் இந்திய அரசிடம் இல்லை எனவும், அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் வட்டியால் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்த இந்தியா தற்போது மோசமான பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது எனவும், பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும், வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கும் அவசர கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து பா.ஜ.க அரசை எச்சரித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க அரசையும் சாடியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியமும், பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது. அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறனின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பா.ஜ.க அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியை விரும்பும் மக்கள், மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட இந்தியாவுக்கு இந்த நிலையா?” - சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி!