India
“சசிகலா மூலம் சிக்கியது அ.தி.மு.க-வின் ஊழல் பணம்” - விரிவான விசாரணை கோரும் கே.எஸ்.அழகிரி!
பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்ததாக வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2016 செப்டம்பர் 22ல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2016 நவம்பர் 8ல் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பா.ஜ.க அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டங்களில் கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன.
கடந்த 2017 நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறை சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் சோதனை நடத்தியது. அதில் சிக்கிய இரண்டு தாள்களில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் கைப்பட எழுதிய விவரங்களில் ரூபாய் 1,674.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய பட்டியலுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதையொட்டி சம்மந்தப்பட்டவர்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இக்காலக்கட்டங்களில் ஜெயலலிதாவின் வீட்டிலும், கொடநாடு பங்களாவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் வெளிக் கொணரப்பட்டு பல இடங்களில் பாதுகாப்பதற்காக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தைக் கொண்டு சென்னையில் பல இடங்களில் வணிக வளாகங்கள், புதுச்சேரியில் உல்லாச விடுதி, கோவையில் காகித ஆலை, காஞ்சிபுரத்திற்கு அருகில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் சாலையில் மென்பொருள் நிறுவனம், கோவையில் 50 காற்றாலைகள் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் சட்டவிரோதமாக பணமதிப்பு இழந்த தொகையின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பேரங்கள் நடைபெற்றதையும் வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்காக முட்டை, பருப்பு மற்றும் சத்துமாவு விற்பனை செய்கிற திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.எஸ்.குமாரசாமிக்கு சொந்தமான கிறிஸ்டி நிறுவனத்திடம் ரூபாய் 240 கோடி செல்லாத நோட்டுகள் கொடுக்கப்பட்டு, ஓராண்டு கழித்து அதே தொகையுடன் 6 சதவீத வட்டியுடன் ரூபாய் 2 ஆயிரம் மதிப்பு கொண்ட புதிய நோட்டுகளாக மாற்றித் தர வேண்டுமென்று வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை சென்னை தியாகராயநகர் வன்னியர் தெருவில் உள்ள சசிகலாவின் நெருங்கிய உறவினரான சிவகுமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து பல அட்டை பெட்டிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை வருமான வரித்துறையிடம் சிவகுமார் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தவகையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் செல்லாத தொகையான ரூபாய் 1,911.50 கோடி வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.
மேலும், இத்தொகையின் மூலம் தேனியில் ரூபாய் 100 கோடிக்கு 1,897 ஏக்கர் எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அருகில் நவீன் பாலாஜி என்பவருக்கு சொந்தமான உல்லாச விடுதி ரூபாய் 168 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இத்தகைய சொத்துக்கள் அனைத்தும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகும், செல்லாத நோட்டுக்களை வங்கியில் திரும்ப செலுத்தி, புதிய நோட்டுகளாக மாற்றுவதற்காக குறிப்பிடப்பட்ட இறுதி நாளான 2017 ஏப்ரல் 1ம் தேதிக்குள்ளும் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு, சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வருமான வரித்துறை மூலம் நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளன.
1991ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது சொத்து மதிப்பு 2.01 கோடியாக இருந்தது, 1996ல் ரூபாய் 66.44 கோடியாக உயர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். இதற்கு சசிகலா உடந்தையாக இருந்த குற்றத்தை செய்ததால், அவரும் தண்டிக்கப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத வகையில் ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய் வருமான வரித்துறையின் சோதனையின் மூலம் தற்போது சிக்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை சசிகலாவின் கைக்கு எப்படி வந்தது ? அன்றைய அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய பயனாளியாக சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் விளங்கினார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக்கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒருபகுதி தான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தினால் பாதிக்கப்பட்ட போது, அதை முதலீடாக மாற்றி சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்குவதற்கு யார், யார் உதவியாக இருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றமாகும். இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
இன்றைய அ.தி.மு.கவோடு சசிகலாவுக்கு சம்மந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கும், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று எவரும் கூற முடியாது. எனவே, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சம்மந்தப்பட்டுள்ள இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத்துறையின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் கடந்தகால அ.தி.மு.க ஆட்சிகளில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அம்பலமாவதற்கும், அதில் பயனடைந்தவர்கள் தண்டனைக்கு உட்படுவதற்கும் உரிய வாய்ப்பாக இந்த விசாரணை அமைய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!