India

“இன்குலாப் ஜிந்தாபாத்” : பட்டமளிப்பு விழா மேடையிலேயே CAA நகலைக் கிழித்தெறிந்து முழக்கமிட்ட மாணவி!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு வகைகளிலும் தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவிருந்தார்.

ஆனால், ஆளுநர் ஜகதீப் தங்கார் குடியுரிமை சட்டத்திற்கெதிரான போராட்டங்களை கண்டிக்கும் விதமாகப் பேசியதால், அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் கறுப்புக் கொடி காட்டினர். இதையடுத்து, அவர் விழாவில் பங்கேற்காமல் ராஜ் பவனுக்கு திரும்பினார்.

பின்னர், ஆளுநர் கலந்துகொள்ளாமலேயே பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் முதன்மை மாணவியான டெப்ஸ்மிதா சவுத்ரி, பட்டத்தையும், பதக்கத்தையும் பெற மேடைக்கு வந்தார்.

பட்டத்தைப் பெற்றுக்கொண்ட டெப்ஸ்மிதா சவுத்ரி, அதை மேடையில் வைத்துவிட்டு, குடியுரிமை சட்ட நகலைக் கிழித்து, “நாங்கள் எங்கள் ஆவணங்களைக் காட்ட முடியாது.. இன்குலாப் ஜிந்தாபாத்” என முழங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்.

பல்கலைக்கழக மாணவி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பட்டமேற்பு விழா மேடையிலேயே முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவி ஆகியோர் தங்கள் பட்டங்களை வாங்க மறுத்தனர். கேரள மாணவி ரபிஹா, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்து பட்டத்தை மற்றும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஹிஜாப்பை கழட்ட சொன்ன பாதுகாப்பு அதிகாரிகள்... எதிர்த்துப் பேசி குடியரசுத் தலைவர் விழாவை புறக்கணித்த மாணவி