India

“CAA-போராட்டத்தில் பங்கெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த சென்னை ஐ.ஐ.டி., மாணவருக்கு நேர்ந்த கதி”

குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் மோடி அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டங்கள் கல்வி நிலையங்களிலும் எதிரொலித்துள்ளது. இதன்விளைவாக கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டக்களத்திற்கு வந்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை இயற்பியல் பிடித்து ஜேக்கப் லிண்டந்தால் என்ற ஜெர்மன்நாட்டு மாணவர், சென்னையில் இடதுசாரிகள் நடத்திய போராட்டத்திலும், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

இந்த போராட்டத்தின் போது, ஜெர்மனியில் இட்லர் ஆட்சி நடைபெற்றதை சுட்டிக்காட்டும், ‘We Have Been There’ என்றும் 1933 - 1945 என்ற வாசகங்களை எழுதிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் கலந்துக்கொண்டார். வெளிநாட்டவரின் பங்கேற்பு போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை அளித்தது.

இந்நிலையில், இந்திய நாட்டின் பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான ஆட்சியை இட்லர் ஆட்சியோடு ஒப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்துத்வா கும்பல், மாணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவர் ஜேக்கப் லிண்டந்தால் இந்தியாவில் தங்கி பயில்வதற்கான அனுமதியை இந்திய குடியுரிமைத் துறை ரத்து செய்துள்ளது. பின்னர், ஜேக்கப் லிண்டென்ந்தால் சென்னை ஐ.ஐ.டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தன்னுடைய படிப்பு இன்னும் ஆறுமாதமே இருக்கும் நிலையில் மோடி அரசாங்கம் அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி மற்றும் சென்னை ஐ.ஐ.டி-க்கு இடையிலான மாணவர்கள் பயில்வதற்கான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் படித்து வந்த ஜெர்மனி மாணவரை திருப்பி அனுப்பியதன் விளைவாக ஜெர்மனி அங்குள்ள இந்திய மாணவர்களை திருப்பி அனுப்புமா என்ற அச்சம் எழுந்துள்ளதாக சகமாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஹிஜாப்பை கழட்ட சொன்ன பாதுகாப்பு அதிகாரிகள்... எதிர்த்துப் பேசி குடியரசுத் தலைவர் விழாவை புறக்கணித்த மாணவி