India
#CAA குறித்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட மோடி! - சி.பி.ஐ(எம்) விமர்சனம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மோடி நேற்று டெல்லியில் உரையாற்றினார். CAA குறித்து மோடி ஆற்றிய உரை பொய்யுரையாக உள்ளது என விமர்சித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு. அக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு :
“CAA, NRC ஆகியவைகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்துவரும் தீவிர மக்கள் போராட்டங்கள் மற்றும் 10 மாநில முதலமைச்சர்கள் NRC-ஐ அமலாக்க மாட்டோம் என அறிவித்திருப்பது ஆகியவைகளால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தோடு நேற்று டெல்லியில் அவர் ஆற்றிய உரை பொய்யுரையாக உள்ளது.
பொய் 1: "நான் 130 கோடி இந்திய குடிமக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எனது அரசு அதிகாரத்துக்கு வந்த 2014ம் ஆண்டில் இருந்து என்.ஆர்.சி குறித்து இன்று வரையில் ஒரு முறை கூட பேசவில்லை’’ என்று மோடி கூறினார்.
* பா.ஜ.க, 2019ம் ஆண்டில் தனது தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் என்.ஆர்.சி அமலாக்கப்படும் என உறுதியளித்திருந்தது.
* நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களவையில் நவம்பர் 9 அன்று, “நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டுவந்து அமலாக்குவோம், ஊடுருவிய ஒருவரைக் கூட விட்டுவைக்க மாட்டோம்” என்று பேசினார்.
* NRC திட்டம், NPR என்ற மக்கள் தொகை பதிவேட்டு வேலைகள் (ஏப்ரல் 1 - செப்டம்பர் 30, 2020) முடிந்தபிறகு தொடங்கும். NPR என்பது NRC திட்டத்தின் முதல் கட்டம். அரசிதழில் இது கடந்த 2019 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டது.
பொய் 2: "நாட்டில் தடுப்பு முகாம்கள் எங்கேயும் இல்லை" என தெரிவித்தார் மோடி.
* கடந்த டிசம்பர் 11ம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலில், "அனைத்து மாநிலங்களிலும் சட்ட விரோத குடியேறிகள் மற்றும் தண்டனை உறுதி செய்யப்பட்டு நாடு கடத்தப்படவேண்டிய அந்நியர்களையும் அடைப்பதற்காக தடுப்பு முகாம்களை கட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடந்த ஜனவரி 9ம் தேதி, தடுப்பு முகாம்கள் கட்டுவது பற்றிய வழிகாட்டுதல்களின் தொகுப்பினை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருக்கிறது.
* மத்திய அரசு கடந்த நவம்பர் 28ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், "நம் நாட்டில் சட்டவிரோதமாக வாழும் அந்நிய தேசத்தவர்களுக்கான தடுப்பு முகாம் அமைப்பதற்கு அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஒரு கடிதமும், 2018ம் ஆண்டு அந்தப் பணிகளின் நிலை அறிய ஒரு கடிதமும் எழுதப்பட்டது" என தெரிவித்தது.
* கடந்த நவம்பர் 2019ல், உள்துறை அமைச்சர் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது அசாம் தடுப்பு முகாம்களில் குடியேறிகளாக சந்தேகிக்கப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு அதில் 28 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவித்தார். 988 அந்நியர்கள் அசாமில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணிக்கையை வெளியிட்டார்.
* 2014 ஏப்ரல் 24/29 ஆகிய தேதிகளிலும், 2014 செப்டம்பர் 9/10 ஆகிய தேதிகளிலும் வழிகாட்டுதல்கள் இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டன. அவற்றை அடிப்படையாக கொண்டு மாதிரி தடுப்பு முகாம்கள்/தங்கும் மையம்/முகாம் மாதிரி ஆகியவை அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் 2018ல் அனுப்பப்பட்டது.
* கர்நாடாக போல பல பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநில அரசுகள் தடுப்பு முகாம்களைக் கட்ட உத்தரவு போட்டுவிட்டன.
பொய் 3 : "நான் யாருடைய மதத்தையும் குறிப்பிட்டுப் பேசியதே இல்லை" என்றார் மோடி.
* ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தியில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, வன்முறையில் ஈடுபடுவோர் யார் என்பதை அவர்களுடைய உடையை வைத்துக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.
* 2019 பொதுத்தேர்தலில் மோடி, வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம் "பெரும்பான்மைகள் சிறுபான்மையாக உள்ள தொகுதி" என்றார்.
ஒரு கொத்துப் பொய்களைச் சொல்லியிருப்பதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதற்கு மோடி முயற்சிக்கிறார். இந்திய அரசமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக அவர்கள் செய்திருக்கும் தாக்குதலை மறைக்கிறார்.
90 நிமிடங்கள் பேசிய அவர், ஒரே ஒரு முறை கூட இந்த அரசாங்கத்தின் கொள்கைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவரும் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை. நம்முடைய பொருளாதாரம் கண்கூடாக மந்த நிலைக்குச் சென்றுவிட்டது, வேலையின்மை கடந்த 50 ஆண்டுகளில் காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளிடையே விரக்தியும் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன, விலைவாசி உயர்வானது மக்களின் வாழ்க்கையை தின்று வருகிறது.
மிகக் கடுமையான விலையேற்றம் காரணமாக வெங்காயம் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. மோடி அரசாங்கத்தின் ஒரே திட்டம், வன்முறையை வெறுப்பை வளர்ப்பதன் மூலம் மக்களிடையே மதப்பிரிவினைகளை கூர்மைப்படுத்துவதும் அவர்களிடையே பிரிவினை அதிகப்படுத்துவதும்தான் என்பது தெளிவாகியிருக்கிறது.
CAA, NRC, NPR-க்கு எதிரான போராட்டங்கள், மோடி அரசு அதிகாரப்பூர்வமாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தும் வரை தொடரும்.”
இவ்வாறு அந்தக் குறிப்பில் தெரிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!