India

#CAAProtest : வடமாநிலங்களில் பதற்றம் நீடிப்பு - பா.ஜ.க ஆளும் உ.பி-யில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் பலி!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. அமைதியாக போராடிய மக்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதலே வன்முறைக்கு காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் 9வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. குறிப்பாக, போராடும் மக்களை ஒடுக்குவதற்கு அரசு, போலிஸாருக்கு தடியடி நடத்தவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் விளைவாக, உத்தர பிரதேசம், கர்நாடகாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் போலிஸார் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாயினர். இதனையடுத்து உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் உத்தர பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

போலிஸாரின் இத்தகைய அடக்குமுறை ஒருகட்டத்தில் கலவரமாக மூண்டது. இந்த கலவரத்தில் பிஜ்னூர் பகுதியில் 2 பேர் பலியாயினர். அதேபோல் சம்பல், பெரோசாபாத், மீரட் மற்றும் கான்பூர் நகரங்களில் நடந்த போராட்டத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில் உத்தர பிரதேசத்தில் மட்டும் இதுவரை 6 பேர் பலியாயினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 3,500 பேர் கைது செய்யப்பட்டனர். 200 பேர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் மீண்டும் 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவருகிறது. ஆனால் போலிஸார் அதனை மறுத்துள்ளனர். போராட்டத்தின் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: LIVE #CAA : குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் பேரணி!