India

‘காஸ் சிலிண்டர்’ டெலிவரி செய்வோருக்கு ‘டிப்ஸ்’ : என்ன சொல்கின்றன காஸ் நிறுவனங்கள்?

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், பெரும்பாலான வீடுகளில் இன்று ‘காஸ் சிலிண்டர்’ பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ‘காஸ் சிலிண்டர்’ விநியோகம் செய்வோர் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வலுக்கட்டாயமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதில், “காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் நபர்களுக்கு பொதுமக்கள் கூடுதல் தொகை வழங்க வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் காஸ் சிலிண்டர் ரசீதில் சில்லறை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். அந்த தொகையை மட்டும் வழங்கினால் போதும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் டெலிவரி செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்குவதை ஆதரிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஸ் சிலிண்டர் விவகாரத்தில் நுகர்வோருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் ஏற்படும் முரண்பாடு குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காஸ் சிலிண்டர் நுகர்வோர் ஒருவர், “கடந்த வாரம் எங்கள் வீட்டில் காஸ் சிலிண்டர் விநியோகிக்க வந்த ஒருவர், மாடிக்கு சிலிண்டர் எடுத்துச் செல்லவேண்டும் என்றால் கூடுதல் பணம் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் அங்கேயே சிலிண்டரை விட்டுவிடுவதாக கூறியுள்ளார். அதனால் என் மனைவி 50 ரூபாய் கொடுத்து மேலே எடுத்து வரச் செய்தார்.

பின்னர், அந்த நபரிடம் அடுத்த முறை இதுபோல கேட்டால் போலிஸில் புகார் அளிப்பேன் எனத் தெரிவித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதுபோன்ற பிரச்னைகள் பல இடங்களில் தொடர்ந்து நிகழ்கின்றன.

பலர் தானாக முன்வந்து டெலிவரி செய்வோருக்கு பணம் கொடுக்கின்றனர். சில நேரங்களில் டெலிவரி செய்வோர் நுகர்வோரிடம் கட்டாயமாக கூடுதல் பணம் (டிப்ஸ்) கேட்கின்றனர். இதுகுறித்து, சி.ஐ.டி.யு-வின் தமிழ்நாடு பெட்ரோலிய எரிவாயு தொழிலாளர் சங்க நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த பிரச்னை எல்லாப் பக்கங்களிலும் உள்ளது. ஏன் சில நேரங்களில் டெலிவரி செய்வோர் கட்டாயமாக டிப்ஸ் கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சம்பளம் போதுமான அளவு கிடைக்காது. அவர்களுக்கு நிறுவனங்கள் சரியான ஊதியம் தருவதில்லை.

ஏ-தர நகரங்களில் தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 600 ரூபாயாகவும், பி-தர நகரத்தில் இது ஒரு நாளைக்கு 510 ரூபாய் மற்றும் கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு 450 ரூபாயாகவும் இருக்கிறது. இது தவிர, அவர்களுக்கு எரிபொருள் செலவுகள் மற்றும் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் கட்டணங்கள் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரிடம் இதுகுறித்து கேட்கும்போது, “சிலிண்டர்களை வீதியில் எடுத்துச் செல்வதற்கும், வீட்டின் முன் கொண்டு செல்வது வரைக்கும் எங்களிடம் வாகனங்கள் உள்ளன.

ஆனால் வீட்டிற்குள் எப்படி எடுத்துச் செல்வது? ஒருநாளைக்கு 40-50 சிலிண்டர்களை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அந்த நாள் முடிவில், மிகுந்த உடல் சோர்வோடுதான் வீடு திரும்புவோம். இந்த வேலைக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் போதாது.

தற்போதைய வாழ்க்கைச் சூழலில் குடும்பத்தை நடத்துவதற்கு 17,000 மூதல் 20,000 ரூபாய் தேவை. ஆனால் ஏஜென்சிகள் ஊதியமாக 12,000 ரூபாய் வரை வழங்குகிறார்கள். இது போதாது. அதனாலேயே வேறு வழியின்றி நுகர்வோரிடம் கேட்டுப் பெறுகின்றனர்.” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே 14.2 கிலோ சிலிண்டருக்கு விநியோகஸ்தர்கள் கமிஷனாக 61.84 ரூபாய் பெறுகிறார்கள். அதில், 27.60 டெலிவரி கட்டணமாக செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், இது சிலிண்டரை விநியோகஸ்தர்களின் கிடங்கில் இருந்து வாடிக்கையாளரின் வீடு வரை கொண்டு சென்று சேர்க்கவே கொடுக்கப்படுகிறது.

மேலும் சராசரியாக, நகரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்வோர் நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 சிலிண்டர்களை வழங்குகிறார்கள். இதனிடையே டெலிவரி நிறுவனங்கள் ஓட்டுநர்களின் சம்பளம் மற்றும் வாகனங்களின் எரிபொருள் செலவுகள், வாகனங்களின் பராமரிப்பு செலவு, வங்கி கட்டணங்கள், குறைபாடுள்ள சிலிண்டர்களின் செலவு மற்றும் மேலாளரின் ஊதியம் ஆகிய பிற செலவுகளை ஈடுகட்டவேண்டும். இதற்கு காஸ் சிலிண்டருக்கு கிடைக்கும் விலை போதுமானதாக இல்லை.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: சிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ் கேட்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!