India
பாலியல் வல்லுறவு செய்வோருக்கு 21 நாட்களில் துாக்கு தண்டனை : ‘திஷா’ சட்டத்தை இயற்றியது ஆந்திர அரசு!
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த ஒரு வார கால இடைவெளியில் மட்டும், 6 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், நாடு முழுவதிலும் இருந்து இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு பாலியல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக, தூக்கு தண்டனை வழங்க சிறப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, ‘திஷா’ என்ற பெயரில் பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட மசோதா ஆந்திரா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மசோதவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஆந்திராவில் பாலியல் குற்றம் நடைபெற்றால், அதுதொடர்பான வழக்கு விசாரணையை 7 நாட்களில் நடத்தி முடிக்கவும், குற்றம் நடந்த 14 நாட்களுக்குள், நீதிமன்ற விசாரணையை முடித்து 'குற்றம் நிரூபிக்கப்பட்டால், 21 நாட்களுக்குள் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை. எனவே, இந்த மசோதா ஆந்திர மாநில சட்டசபையில் நிறைவேறியதன் மூலம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக ஆந்திரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர அரசின் இந்த மசோதா மக்களிடையே ஆதரவைப் பெற்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலிஸாரின் அலட்சியத்தால் சில நேரங்களில் தவறான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!