India

23 வயது இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து எரித்துக் கொல்ல முயற்சி : பீகாரில் அடுத்த அவலம் !

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போதும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்தாலும், காலப்போக்கில் அவை கானல் நீர் ஆகி விடுகின்றன.

தெலங்கானாவில் தொடங்கி நேற்றைய தினம் திரிபுரா வரை கடந்த ஒரு வாரத்தில் 5 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க, அரசு போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் 23 வயது இளம்பெண் ஒருவரை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அஹியாபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 7ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் மாணவி தனியாக இருப்பது தெரிந்து அவர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளார். அதிர்ச்சியில் வெளியே தப்பிக்க முயன்ற பெண்ணைத் தாக்கி பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், அந்த இளம்பெண் அவரை எதிர்த்துப் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை இளம்பெண் மீது ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் தகவலறிந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 50% தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இளம்பெண்ணின் தாயா அஹியாபூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read: பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஊக்குவிக்கிறதா பா.ஜ.க அரசு? - 2002 குஜராத் வன்முறையும் இன்றைய காலகட்டமும்!