India

உன்னாவ் கொடூரம் : “உயிர் வாழ விரும்பிய பெண்ணை அரசால் காப்பாற்ற முடியவில்லையே?”- பிரியங்கா காந்தி வேதனை!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க உத்தர பிரதேச அரசு என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பிரியங்கா காந்தி.

உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நிலையில், அந்தக் கொடுமைக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்குச் செல்லும்போது குற்றவாளிகளால் எரித்துக் கொல்லப்பட்டார்.

90% தீக்காயத்தோடு அந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அளித்த வாக்குமூலத்தில் மருத்துவர்களிடம், “நான் உயிரோடு இருக்க விரும்புகிறேன்; என்னைக் காப்பாற்றுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், உத்தர பிரதேச பா.ஜ.க அரசை கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பிரியங்கா காந்தி.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "உன்னாவில் ஏற்கெனவே நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை? இச்சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்த போலிஸ் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தார் இத்துயரத்திலிருந்து மீளவேண்டி பிரார்த்திக்கிறேன். அப்பெண்ணுக்கு நீதி வழங்க முடியாமல் போனதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையே இந்தச் சம்பவம் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - அதிர்ச்சி தகவல்!