India

ஒவ்வொரு மணி நேரமும் 4 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிர்ச்சித் தகவல்!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற குற்ற சமபவங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை, சைபர் குற்றங்கள், கடத்தல், கொலை, ஆசிட் வீசுதல் போன்ற குற்றங்கள் எத்தனை நடந்திருக்கின்றன, அதில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் உள்ளிட்ட புள்ளி விவரங்கள் வகைப்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களில் 3,59,849 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுவே 2016-ம் ஆண்டில் 3.38 லட்சம் வழக்குகளும், 2015-ல் 3.2 லட்சம் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது தெளிவாகிறது.

இதில் அதிக குற்றங்கள் நடைபெற்ற மாநிலமாக உத்திரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் 56,011 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து 31,979 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், 30,992 வழக்குகளுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதில் 5,397 வழக்குகளுடன் தமிழகம் 17வது இடத்தில் உள்ளது.

இந்த குற்ற சம்பவங்களில் 2017-ம் ஆண்டு 32,559 பாலியல் வன்கொடுமை/வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில், மத்திய பிரதேசத்தில் தான் அதிகபட்ச பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் 5,562 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதாவது ஒவ்வொரு மணி நேரமும் இந்தியாவில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வருந்தச் செய்கிறது.

அதேப்போல் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமன்றி, இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு பின் 227 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் கொல்லப்பட்டவர்கள் 2 பேர்.

இந்த அறிக்கையில் உள்ள மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது, பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பழக்கமானவர்களாகவோ, உறவினராகவோ, குடும்பத்தாராகவோ இருப்பது தான். குறிப்பாக 32,559 வழக்குகளில் 93.1% வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதிக்கப்படவர்களுக்கு தெரிந்தவர்கள் ஆவர்கள்.

அதில் 4 பேரில் ஒருவருக்கு மட்டுமே நீதி கிடைப்பதாகவும், மற்ற குற்றவாளிகள் அரசியல் தலையீடு, அதிகார தலையீடு, பணபலம் மூலம் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிவதாகவும் கூறுகிறது புள்ளி விவரம்.

மருத்துவர் பிரியங்கா ரெட்டி வழக்கை, போலிஸ் உடனடியாக பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தால், அவருக்கு நடந்த கொடூரத்தை தடுத்திருக்கலாம். ஆனால், “ உன் பொண்ணு யார் கூடையாது ஓடி போயிருப்பா” என்று மன நோகப் பேசி, ஐதராபாத் காவல் துறை அலட்சியம் காட்டியது. விளைவு, பிணமாக மீட்கப்பட்டார் பிரியங்கா.

இது ஐதராபாத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் பாலியல் வழக்குகள் தாமதமாக தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.