India

“மறுவரையறை,இடஒதுக்கீடு பணிகள் முடிந்தபின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்”-ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்!

உள்ளாட்சி தேர்தலில் அரசு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அனைத்து மாவட்டங்களுக்குமான தொகுதி வரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை முடித்த பின்னர்தான் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன் என்றும், சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் முறையாக ஏற்பாடுகளைச் செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தி.மு.க தரப்பு மனுதாரரும், தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்றைய தீர்ப்பு என்பது அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடித்த பின்னர் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான். அப்போது நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தவேண்டும்.

அதனை விடுத்து புதிய 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தல் அறிவித்தால் அது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும். அனைத்து நடவடிக்கைகளையும் முடித்த பின்னரே தேர்தல் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க கோரி வந்தது. அதையேதான் உச்சநீதிமன்றமும் இன்று உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அரசு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அனைத்து மாவட்டங்களுக்குமான தொகுதி வரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை முடித்த பின்னர்தான் தேர்தல் அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி” - மு.க.ஸ்டாலின் வரவேற்பு!