India

சி.ஆர்.பி.எப் வீரர்களால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு : உத்தர பிரதேசத்தில் நடந்த வெறிச்செயல்!

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தவாரம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை 4 லாரி டிரைவர்கள் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்தனர்.

அதனையடுத்து மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற சம்பவமும் நடைபெற்றது. இதனையடுத்து நாடாளுமன்றத்திலும் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய சி.ஆர்.பி.எப் வீரர்களே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாலியா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி வீட்டில் இருந்துள்ளார்.

Also Read: 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை? : கோவையில் நடந்த கொடூரம்! - அதிர்ச்சி தகவல்

அப்போது அங்கு வாகனத்தில் வந்த 4 பேர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியின் தாயாரை வெளியே போகும்படி மிரட்டியுள்ளனர். மாணவியின் தாய் பயத்தில் கூச்சலிட்டதால் அவரை தாக்கியுள்ளனர். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு மாணவி கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.

உடனே அந்த மாணவியை தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, தாங்கள் கொண்டுவந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஹாலியா வனப்பகுதிக்கு சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

பின்னர், சில மணிநேரத்திற்கு பிறகு மாணவியை வீட்டுக்கு அருகே விட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி மாணவியின் தாயாரும், அப்பகுதி மக்களும் ஹாலியா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், குற்றவாளிகள் 4 பேரும் சி.ஆர்.பி.எப் வீரர் என தெரியவந்தது. மேலும், மாணவியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சி.ஆர்.பி.எப் வீரர் மகேந்திர குமார், கணேஷ் பிரசாத் பிந்த், லோவ்குஷ் பால், ஜெய்பிரகாஷ் மவுரியா ஆகிய 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி உள்பட 5 பேருக்கும் மருத்துவ சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.