India

செல்போன் நிறுவனங்களுக்கு சலுகை; பாஜகவுக்கு அளித்த தேர்தல் நன்கொடைக்கு நன்றிக் கடனா? - காங்கிரஸ் கேள்வி?

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட பகுதி தொகையை மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிரிப்பு தெரிவித்தன. மேலும் செலுத்தவேண்டிய தொகையையும் செலுத்தாமல் காலம் கடத்தி வந்தன

இதனையடுத்து ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையை ஒப்படைக்கும்படி நீதிமன்றமும் தெரிவித்தது. மேலும் மத்திய அரசுக்கு அந்நிறுவனங்கள் 92,641 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வோடாபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்துவதற்கு மோடி அரசு சலுகை அளித்துள்ளது. பெரிய நிறுவணங்களுக்கு மோடி அரசு சலுகை அறிவித்தது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது அவர் அளித்த பேட்டியில், “பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் லாபம் அடைந்தது. குறிப்பாக 7 ஆயிரம் கோடிக்கு அதிகமாக லாபம் ஈட்டின.

ஆனால், தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அந்த நிறுவனங்கள் 11 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளன. இதன் மூலம் மோடி அரசு திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது என்றே தெரிகிறது.

அதுமட்டுமின்றி, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களின், லாபத்தை குறைத்து அதனை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

மேலும் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை அழித்து விட்டு, தனியார் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்?, தேர்தலின் போது ஆதாயம் அடைந்ததற்கு நன்றிக்கடனாக மத்திய அரசு இதை செய்கிறதா? என பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.