India
ரோஜா பாலியல் வன்கொலையில் இன்னும் குற்றவாளிகளை தேடும் போலிஸார்... பொதுச்சமூகம் ‘கள்ள மவுனம்’ காப்பது ஏன்?
ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இளம்பெண்ணை வல்லுறவு செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கர்ப்பிணி இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழக அளவிலேயே பெரிதாக கவனம் கொள்ளப்படாத சூழல் நிலவுகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆன்டி சிறுவள்ளூர் பகுதியில் வசிக்கும் பூபதி என்பவரின் மகள் ரோஜா (19). இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் காரை கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷும் காதலித்து வந்துள்ளனர். ராஜேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரோஜா மாயமான நிலையில், ராஜேஷ் உடன் சென்றிருப்பார் என அவரது உறவினர்கள் கருதியுள்ளனர். இந்நிலையில் தான், அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார் ரோஜா.
ரோஜாவின் உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்ட தழும்புகளும், காயங்களும் இருந்ததால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி வேண்டி ரோஜாவின் குடும்பத்தினரும், ஜனநாயக அமைப்பினரும் போராடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலை மிகுந்த ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கான நீதி கேட்கும் குரல்கள் கூட வகுப்பைப் பொறுத்து மாறுபடுவது தான் நம் நாட்டின், சமூகத்தின் அவலநிலை.
ஐதராபாத் வன்கொலைக்குக் காரணமான நால்வர் போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். காஞ்சிபுரம் கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர் என்கிறது போலிஸ் தரப்பு.
ஐதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா கொல்லப்பட்டதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் ரோஜா எனும் கர்ப்பிணி இளம்பெண். ஆனால், இந்திய அளவில் கவனம் பெற்றதென்னவோ ஐதராபாத்தில் நிகழ்ந்த படுபாதகச் சம்பவம் தான்.
இந்த இடத்தில்தான் குற்றங்களுக்கு எதிரான குரல்கள் தன்னிச்சையாக ஒலிப்பதில்லையோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர் குறித்த இதர தகவல்களும் கூட, அறச்சீற்றத்தின் அளவினை நிர்ணயிக்கின்றன. பிரியங்கா மரணத்திற்கு நீதி வேண்டும் சமூகத்தின் குரல் ரோஜாக்களுக்கு ‘கள்ள மவுனம்’ காப்பது ஏன் என்கிற கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !